search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அங்கிள்... எங்களோடு சிறிது நேரம் விளையாடுங்களேன்... மாணவிகளுக்கு பந்து வீசிய ராகுல்காந்தி
    X

    அங்கிள்... எங்களோடு சிறிது நேரம் விளையாடுங்களேன்... மாணவிகளுக்கு பந்து வீசிய ராகுல்காந்தி

    • ராகுலும் தனது பயண பாதையில் ரோட்டோரத்தில் தன்னை பார்க்க கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி மகிழ தவறவில்லை.
    • ராகுல் காந்தி மாணவிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பந்தை எடுத்து வீசினார்.

    காங்கிரசின் கோட்டையிலே ஒய்யலாலா.... என்று ஆடிப்பாடி, உற்சாகத்துடன் ராகுலுடன் நாலு நாட்கள் நடந்து கேரளாவுக்கு வழியனுப்பி வைத்தார்கள் காங்கிரசார்.

    கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டையாகத்தான் இருந்தது ஒரு காலத்தில் என்பது உண்மை தான். எல்லா இடங்களையும் போல் இந்த இடத்தையும் கோட்டை விட்டது உண்மை.

    எல்லா மாநிலங்களையும் போல் இங்கும் விழுந்த ஓட்டையை தனது யாத்திரையால் மாற்றிவிட முடியும் என்று ராகுல் கருதுகிறார்.

    அதனால்தான் கன்னியாகுமரி மக்கள் 'அப்பச்சி' என்று என்றும் கொண்டாடும் காமராஜரின் மண்ணில் இருந்து பேசுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    வரும் காலம் மாற்றமா? ஏமாற்றமா? என்பதை காலம் தான் கணிக்கும். ஆனால் மறையாத பல நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்து சென்றுள்ளார்.

    நேரு, இந்திரா, ராஜீவ் என்று மூன்று தலைவர்களின் வரிசையில் அந்த குடும்பத்தின் வாரிசான ராகுலை இந்த காலத்தில் தங்கள் கிராமத்தில் பார்த்த சந்தோச நினைவுகள் பலரது முகங்களில் நிழலாடுகிறது.

    ராகுலும் தனது பயண பாதையில் ரோட்டோரத்தில் தன்னை பார்க்க கூடியிருந்தவர்களிடம் கைகுலுக்கி மகிழ தவறவில்லை. நாட்டில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை நேரில் பார்க்கவே இந்த யாத்திரை என்றார். அதற்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

    4-வது நாளான நேற்று மதியம் முளகுமூடு, கல்லுவிளை என்ற இடத்தில் சிலம்ப கலைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரியவர் ஒருவர் மிகப்பெரிய 'பக்கோடா மீசையுடன்' நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் ராகுலுக்கு ஆச்சரியம். அருகே வரும்படி கைகாட்டி அழைத்தார். அவரது மீசையை ஆச்சரியமாக பார்த்த ராகுலிடம் அவர் 'நான் ஆசானாக்கும்...' என்றார் மலையாளம் கலந்த தமிழில்!

    அதை கேட்டதும் இந்த வயதிலுமா? என்று ஆச்சரியத்துடன் பார்த்த ராகுல் முன்னிலையில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சிலம்பத்தை சுற்றி ராகுலை வியக்க வைத்துவிட்டார்.

    'உங்கள் கூட என்னால் வேகமாக நடக்கவும் முடியும் என்றவர் மீசையை தடவியபடி சிறிது தூரம் ராகுலுடன் நடக்கவும் செய்தார்.

    அவரை பாராட்டிவிட்டு அங்கிருந்து நடையை கட்டிய ராகுல் காட்டாத்துறை என்ற இடத்தில் சென்றபோது தி பாக்கிய நாத் பப்ளிக் பள்ளி என்ற பள்ளிக்கூடத்தில் மாணவிகள் கூடை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

    அவர்கள் வியர்க்க விறுவிறுக்க பள்ளி வாசலுக்கு வந்து ராகுலை பார்த்து கொண்டிருந்தார்கள். உடனே யாத்திரை அணி வகுப்பில் இருந்து விலகி தட தடவென்று பள்ளி வளாகத்துக்குள் சென்றுவிட்டார். அவரை பார்த்ததும் மாணவிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

    அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கினார். அதில் ஒரு குறும்புக்கார மாணவி டெல்பா என்பவர் 'அங்கிள், பிளீஸ் கம் ஆன்ட் ஜாயின் மீ என்று ஆங்கிலத்தில் பேசி ஆர்வமாக அழைத்ததும்' நான் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமல்லவா? ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முக்கியம். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

    மாணவிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பந்தை எடுத்து வீசினார். அதை தொடர்ந்து எங்களோடு ஒரு செல்பியாவது எடுங்கள் என்றதும் அவரும் போஸ் கொடுத்தார். அனைவரும் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.

    மாணவிகள் டெல்பா, அகான்சியா ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்தோம்.

    எங்களை பார்த்து ராகுல் வந்ததை நம்பவே முடியவில்லை. எங்களோடு கைகுலுக்கியபடி 'டீமில் இருக்கிறீர்களா' என்று கேட்டார். நாங்கள் ஆமாம் என்றதும் மிக்க மகிழ்ச்சி என்றார். அதோடு நன்றாக விளையாடுங்கள், வெற்றி பெறுங்கள். உங்கள் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வாழ்த்துக்கள் என்றார்.

    எங்கள் மைதானத்துக்குள் அழைத்தோம். ஆனால் வர இயலாதது பற்றி சொன்னார். சிறந்த விளையாட்டு வீரர்களாகவும், நாட்டுக்கு நல்ல குடிமக்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    ராகுல் எங்களோடு இருந்தது ஓரிரு நிமிடங்கள் தான். ஆனால் எங்களுக்கு மறக்க முடியாத நினைவுகள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×