search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரியில் 1 லட்சம் பேரை சந்தித்த ராகுல்காந்தி- எளிமையான பழக்கத்தால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்
    X

    குமரியில் 1 லட்சம் பேரை சந்தித்த ராகுல்காந்தி- எளிமையான பழக்கத்தால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்

    • 100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசினார்.
    • குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அவர் பாத யாத்திரை மேற்கொண்டார். 55 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்து நேற்று கேரளா எல்லை பகுதிக்கு ராகுல் காந்தி சென்றார்.

    இன்று காலை ராகுல் காந்தி குமரி மாவட்ட எல்லையான செருவார கோணத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டபோது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரை கண்டுகளித்தனர்.

    சாலையின் இரு புறமும் நின்று கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீராங்கனைகள், பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருடனும் ராகுல் காந்தி செல்பி எடுத்து மகிழ்ந்தார். தொண்டர்களையும் அவர் உற்சாகப்படுத்தினார். தினமும் ஓய்வு நேரங்களில் ஒவ்வொரு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

    விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவப் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் ராகுல் காந்தியிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவரும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பினரிடமும் உறுதி அளித்து உள்ளார்.

    100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல்காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசினார். இது பார்ப்பவர்களை கவரும் வகையில் இருந்தது. பாத யாத்திரையின்போது சாலையோர டீக்கடை ஒன்றிலும் டீ குடித்து அசத்தினார். இளநீர் பருகியும் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார்.

    குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ளனர். மாவட்ட எல்லையான தலச்சன்விளையில் குமரி மாவட்ட பாத யாத்திரையை நிறைவு செய்து பேசிய ராகுல் காந்தி தமிழக மக்கள் மீது தனக்கு தனி ஈடுபாடு உண்டு என்றும், உங்களை விட்டு பிரிந்து செல்வது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் பேசியது தொண்டர்களை மட்டுமின்றி பொது மக்களையும் கவர்ந்தது.

    ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையானது 2024 பாராளுமன்ற தேர்தலை நோக்கியே மேற்கொண்டு உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்து வருகிறது. பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் கூட்டணியான தி.மு.க. வசம் உள்ளது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒரு உத்தியோகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

    Next Story
    ×