search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும்: சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் வலியுறுத்தல்
    X

    எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும்: சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் வலியுறுத்தல்

    • அதிமுக-வில் இருந்து ஓ. பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் நீக்கம்
    • சட்டமன்றத்தில் இருக்கைகளை மாற்றியமைக்க அதிமுக-வினர் கோரிக்கை

    அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும். அதற்காக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கை அருகில் உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டசபையில் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதுதொடர்பாக பலமுறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பும் செய்துள்ளனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி சட்டசபை கூடுகிறது. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தபோது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், "தற்போது கோரிக்கை ஏதும் வரவில்லை" என்று கூறினார்.

    இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று குழுவாக சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஏற்று ஓ.பி.எஸ். இருக்கையை மாற்றுமாறு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ ஆகியோர் சபாநாயகரிடம் 3-வது முறையாக மனு அளித்தனர்.

    இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துவிட்டு வெளியே வந்த பிறகு செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-

    சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி அதை முதல் கடிதம், 2-வது கடிதமாக சபாநாயகரிடம் ஏற்கனவே கொடுக்கப்பட்டது. இன்று 3-வது முறையாக மனு அளிக்கப்பட்டு உள்ளது. இருக்கை வழங்குவது பரிசீலனையில் இருப்பதாக சபாநாயகர் கூறி இருக்கிறார்.

    இடத்தை வழங்குகிறீர்களா? இல்லையா? என்பது தெளிவாக எங்களுக்கு கடிதம் மூலமாக கொடுக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின் மூலமாக பதில் வந்தவுடன் அதற்கான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

    இந்த கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×