search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வார இறுதிக்குள் தமிழக போக்குவரத்து கழகங்களில் 600 டிரைவர்கள், கண்டக்டர்கள் பணி ஓய்வு- பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
    X

    வார இறுதிக்குள் தமிழக போக்குவரத்து கழகங்களில் 600 டிரைவர்கள், கண்டக்டர்கள் பணி ஓய்வு- பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

    • அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
    • அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் உள்ளன.

    இந்த போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 20,127 பஸ்கள் உள்ளன. இவற்றில் 18,723 பஸ்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. 1404 பஸ்கள் இதற்கான மாற்று பஸ்கள் ஆகும். அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

    அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களுக்கான காலி பணியிடங் கள் அதிகரித்து வருவதால் பஸ்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதிக்குள் 600 முதல் 700 டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதியில் 600 முதல் 700 ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவதால் பஸ்களின் இயக்கங்கள் மேலும் பாதிக்கப்படும்.

    தமிழக போக்குவரத்து கழகங்களில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி நில வரப்படி 1,44,818 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நிலவரப்படி 1,16,259 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 28,559 ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்களை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓய்வு பெற்ற டிரைவர்கள், கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓய்வு பெற்ற டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வருகிற 3-ந்தேதி தமிழகம் முழுவதும் தொழிலாளர்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மண்டல அளவில் வருகிற 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

    Next Story
    ×