search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி ஓய்வு"

    • தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார்.

    திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது.

    கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.

    அதன்படி பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். இடுக்கி மோப்பநாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி மோப்பநாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி மாவட்ட எஸ்.பி. குரியகோஸ் மாலையிட்டு வரவேற்றார். அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமிற்கு அனுப்பப்படும் ஆனால் ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று எஸ்.பி. அவரிடம் ஜெனியை ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகமாக சென்றது.

    • கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
    • பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.

    இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.

    அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.

    நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.

    ×