search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது- எடப்பாடி பழனிசாமி

    அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிய வருகிறது.

    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது தி.மு.க.வில் தற்போது பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மூத்த நிர்வாகியுமான டி.ஆர். பாலு தான்.

    ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர். பாலு இத்திட்டத்தை தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் செயல்படுத்த முடிவெடுத்து 2010-ல் மத்திய அரசின் ஒப்புதலை பெற்றார்.

    இதை டி.ஆர்.பாலுவே தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தி.மு.க. தான் அதைக் கொண்டுவந்தது என்பதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

    அதே போல, ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வுப்பணி துவங்க, 4 ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு 2011 ஜனவரி மாதத்தில் அனுமதி அளித்தது தி.மு.க. அரசு தான். அதுவும் தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, அவரது முன்னிலையில் தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    மேலும் தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் இசைவாணை முதன் முதலில் 2008-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது.

    அதே போன்று, 2010-ம் ஆண்டு, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 7 கிணறுகளுக்கு திமுக ஆட்சிக்காலத்தில்தான் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது.

    2011-ல் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5 கிணறுகளுக்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் இசைவாணை வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை புரட்சித் தலைவி அம்மா அமைத்தார்.

    அதோடு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், புரட்சித் தலைவி அம்மா காவேரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீத்தேன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு, மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் 8.10.2015 அன்று கேட்டுக் கொண்டார்.

    மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 9.2.2020 அன்று தலைவாசலில் நடந்த கால்நடைப் பூங்கா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை நான் வெளியிட்டேன்.

    இப்படிப்பட்ட நிலையில் ஒரு செய்தியில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிய வருகிறது.

    அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனமோ அல்லது இதுபோன்ற இதர எண்ணை நிறுவனங்களோ, ஏதேனும் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவில்லையோ அதுபோல், முதல்-அமைச்சரும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிரான ஓ.என்.ஜி.சி.யின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு, அரசின் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

    Next Story
    ×