search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹைட்ரோகார்பன் திட்டம்"

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா விவசாயிகள் குமுறி எழுவார்கள் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். #PazhaNedumaran #Hydrocarbon

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த கூடாது என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    குடியரசு தினத்தன்று தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 16-வது நாளாக நடந்தது. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

    பின்னர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சங்க காலத்தில் இருந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி திகழ்ந்து வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டங்களால் விளை நிலங்களை அழித்து வருகிறது. வேளாண்மை நிலங்களை நாசமாக்கினால் இந்த மக்கள் என்ன செய்வார்கள்.

    கிராம மக்களும், விவசாயிகளும் வாழையடி வாழையாக வசித்து தாங்களும் வாழ்ந்து மக்களையும் வாழ வைத்து வருகிறார்கள்.

    இன்றைய நவீன உலகில் பெட்ரோலிய பொருட்களின் தேவை மிகவும் குறைந்து வருகிறது. 2030-ம் ஆண்டு பெட்ரோலிய காரே கிடைக்காது என மோடி அரசு அறிவித்துள்ளது.

    இதன் பின்னர் மின்சார கார்கள் தான் 2030-க்குப் பிறகு வர உள்ளது. எனவே இன்னும் 11 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதால் என்ன பயன்? காவிரிப் படுகையை பாதுகாப்பதற்கு தான் இப்பகுதி மக்கள் போராடுகிறார்களே தவிர சொந்த நலனுக்காக அல்ல.

    எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் குமுறி எழுவார்கள்.

    இவ்வாறு நெடுமாறன் தெரிவித்தார். பேட்டியின் போது விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உடன் இருந்தார்.

    திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி குடியரசு தினத்தன்று போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனால் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி பி.ஆர்.பாண்டியன் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று தினம் திருக்காரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில் தினமும் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டம் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்திருந்தது.

    அதன்படி திருக்காரவாசல் கடைவீதியில் போராட்ட குழு தலைவர் தியாகராஜன் மற்றும் சுப்பையன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த போராட்டம் விடிய விடிய அதிகாலை வரை தொடர்ந்து நடந்தது. இதில் குழந்தைகளுடன் பெண்கள், ஆண்கள், கலந்து கொண்டனர். அங்கேயே படுத்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தமத்திய அரசையும், வேதாந்தா நிறுவனத்தையும் கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இன்று காலை 6 மணியுடன் போராட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் போராட்டம் நடைபெறும் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #PRPandian

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் விவசாயிகள்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிந்த பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களுக்கு துளியும் பயன் இல்லாத இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருகாரவாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகின்ற 22-ந் தேதி விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.

    மேலும் ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian

    ×