search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயிற்றில் மாத்திரை வடிவில் இருந்த தங்கத்தை படத்தில் காணலாம்
    X
    வயிற்றில் மாத்திரை வடிவில் இருந்த தங்கத்தை படத்தில் காணலாம்

    ‘அயன்’ பட பாணியில் தங்கத்தை கடத்திய 3 பேர் கைது - ‘எக்ஸ்ரே’ பரிசோதனையில் சிக்கினர்

    கோவை விமான நிலையத்தில் ‘அயன்’ பட பாணியில் தங்கத்தை கடத்திய 3 பேர் கைது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூர், இலங்கை விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. வளைகுடா நாடான சார்ஜாவில் இருந்து மட்டும் தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வருபவர்கள் தங்கம் மற்றும் போதை பொருட்களை நூதன முறையில் மறைத்து வைத்து கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் சந்தேகப்படும் படியாக வரும் நபர்களை சோதனை செய்து சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை துணை இயக்குனர் சதீஸ் தலைமையில் அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.அப்போது அந்த விமானத்தில் வந்த சிவகங்கை, திருச்சி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 5 வாலிபர்களின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அவர்கள் 5பேரையும் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். ஆனால் சோதனையில் ஏதும் சிக்கவில்லை. தொடர்ந்து அவர்களின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்களை தனித்தனியாக அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது அவர்களில் சிலர் தங்கத்தை பொடியாக்கி, அதில் பசை கலந்து டேப்சுற்றி ஆசன வாய் பகுதியிலும், ஒரு சிலர் தங்கத்தை பொடியாக்கி மாத்திரை வடிவில் உருவாக்கி அதனை வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்தது.

    அயன் படத்தில் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு போதை பொருளை மாத்திரையாக செய்து அதனை விழுங்கி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி செல்லும் காட்சி இடம்பெற்று இருக்கும். அந்த பட பாணியில் இந்த 5 பேரும் தங்கத்தை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பிடிபட்ட 5 பேரையும் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று இனிமா கொடுத்து குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் மாத்திரை வடிவில் இருந்த தங்கத்தை வெளியே எடுத்தனர்.

    இந்த 5 பேரிடம் இருந்து மொத்தம் 6 கிலோ 642 கிராம் பசை வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த 5 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 5 பேரும் தங்கத்தை கடத்தி வரும் குருவியாக செயல்பட்டது தெரிய வந்தது.

    இவர்களிடம் தங்கத்தை கொடுத்து அனுப்பிய கும்பல் யார் ? என அதிகாரிகள் 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே அதிகாரிகள் 5 பேரின் பெயர்களை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    இந்த சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×