search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்?- தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வர எவ்வளவு நாள் தேவைப்படும்? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    மதுரை:

    மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. இதனால் இணையதள சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இணையதளத்தில் மூழ்கி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி, பல லட்ச ரூபாயை இழந்து, பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    இந்த விளையாட்டு ஆன்லைனில் தொடருமானால் மேலும் பல உயிரிழப்புகளை தமிழக குடும்பங்கள் சந்திக்க நேரிடும். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதுதொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சரும் அறிவித்து உள்ளார். இருப்பினும் சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்பதால், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. அரசு அதிக முக்கியத்துவத்துடன் இந்த விவகாரத்தை கையாள்கிறது. சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது. எனவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    அதற்கு நீதிபதிகள், “இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களில் பலர் தினந்தோறும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளது. பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் ஈடுபடுகின்றனர். சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் அதிகம் உள்ளது. இந்த விஷயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு, அது தொடர்பான சட்டம் இயற்ற எவ்வளவு நாள் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்பட உள்ளதா அல்லது, விதியாக அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×