search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    மக்கள் சபை கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தியது தவறான முன்னுதாரணம்- அமைச்சர் உதயகுமார்

    மக்கள் சபை கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருப்பது ஒரு தவறான முன் உதாரணமாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
    மதுரை:

    மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு அதனை தொடங்கி வைத்தார். அதில் பேரவை மாநில துணைசெயலாளர் வெற்றிவேல், அவைத்தலைவர் அய்யப்பன், இளைஞரணி செயலாளர் ஆர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் உயர்வு நாட்டுயர்வு என்ற முதல்-அமைச்சரின் உயரிய சிந்தனையால் உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து 100 டன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன் மூலம் மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளது என்பதை விவசாய மக்கள் நன்கு அறிவார்கள். தற்போது பருவமழை தொடங்கி உள்ளது. எனவே முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 4,12,000 ஏக்கர் நிலங்கள் குறுவை வேளாண் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இன்றைக்கு வேளாண் மசோதா நன்மையை ஆராயமல் இந்த திட்டத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் ஸ்டாலின் பேசி வருவதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் சபை கூட்டம் என்ற பெயரில் பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்காத தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருப்பது ஒரு தவறான முன் உதாரணமாகும்.

    தற்பொழுது வேளாண் சட்ட மசோதாவில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிந்தும் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகத்திற்காக அப்பாவி விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காய முயற்சிக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. ஏனென்றால் தி.மு.க. மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த போதும், தமிழகத்தில் ஆட்சி செய்த போதும் விவசாயிகளுக்கு அவர்கள் செய்த துரோகத்தை ஒரு நாளும் மறக்க முடியாது.

    அவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×