search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    தென்மேற்கு பருவமழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர்- விவசாயிகள் மகிழ்ச்சி

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    பேரூர்:

    கோவை மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த வாரம் முதல் இந்த மழை தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி மற்றும் சிறுவாணி வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதனால் நொய்யல் ஆற்றுக்கு தண்ணீரை கொண்டு வரும் அனைத்து ஓடைகளிலும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. இந்த தண்ணீர் அனைத்தும் நொய்யல் ஆற்றுக்கு வந்ததால், வறண்டு கிடந்த ஆற்றில் தற்போது தண்ணீர் வரத்தொடங்கி இருக்கிறது.

    தற்போது இந்த தண்ணீர், இந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடிக்கு நேற்று வந்தடைந்தது. தற்போது குறைந்த அளவிலேயே தண்ணீர் வருவதால், தடுப்பணையின் இடதுபுறம் உள்ள ஷட்டர் வழியாக தண்ணீர் ஆற்றுக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தண்ணீர் ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    தொடர்ந்து பருவமழையின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதுடன், அதிகளவில் தண்ணீர் வரும் பட்சத்தில் குளங்களுக்கு திறந்துவிடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    மழை பெய்யாததால் நொய்யல் ஆறு வறண்டு கிடந்த நிலையில், தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், ஆற்றில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பொதுவாக மழைக்காலங்களில் கோவை மாநகரில் அவினாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை, ராம்நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே இருக்கும் சுரங்கப்பாதை, வடகோவை மேம்பாலம் கீழ்ப்பகுதி, லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும்.

    அத்துடன் தேங்கி நிற்கும் மழை நீரால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இவ்வாறு மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் வைத்து மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ள மேம்பாலங்களின் கீழ் தேங்கும் மழைநீரை வெளியேற்ற போதுமான அளவு மின் மோட்டார்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொள்ள தயாராக உள்ளனர்.

    தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் இந்த பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×