search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    ராஜபாளையம் அம்மா உணவகத்தில் அ.தி.மு.க.வினர் இடையே தகராறு

    ராஜபாளையத்தில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில் அ.தி.மு.க.வினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் உணவக பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ராஜபாளையம்:

    ஊரடங்கையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயார் செய்வதற்கான தொகையை அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணனிடம் வழங்கினார். இதனைதொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு களபணியாளர்களுக்கு அம்மா உணவகங்களில் இருந்து பார்சல்களாக உணவு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராஜபாளையத்தில் ஜவகர் மைதானத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் பார்சல் உணவுகளை கொண்டு சென்று வினியோகிப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் உணவு வினியோகம் செய்வது நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டு அந்த பணிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு அந்த பிரமுகர் உள்ளிட்டோர் உணவு பார்சல் போட்டுக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், பணியிடத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அம்மா உணவக பணியாளர்கள் பணியை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.

    இதை அறிந்த நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் மற்றும் ராஜபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணிநேரத்திற்கு பிறகு உணவக பணியாளர்கள் பணிகளை தொடங்கினர். இதனால் உணவு வாங்க வந்திருந்தவர்கள் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர்.

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கூறும்போது, “நடந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது அம்மா உணவகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் அம்மா உணவகத்துக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
    Next Story
    ×