search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினி சொல்வது புஸ்வாணம் ஆகும்- எஸ்.வி.சேகர் கருத்து

    இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது என்றும் ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும் என்றும் நடிகரும் பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாவட்ட செயலாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். அப்போது தனது அரசியல் பார்வை, அரசியல் மாற்றம் ஏற்படுத்த வைத்துள்ள 3 திட்டங்கள் உள்ளிட்ட பல வி‌ஷயங்களை பேசினார்.

    தன் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் என்று ரஜினி கூறினார்.

    இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் அரசியல் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது.

    இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் நடிகரும் பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது:-

    முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது. அது எனக்கு, ‘செட்’ ஆகாது’ என, ரஜினி கூறியிருக்கிறார். அவர் கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி, அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை.

    கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்த ராஜதந்திரமும் தேவை. எனவே, ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது. இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும். கட்சி, ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் கட்சி, சின்னம் முடங்கும். இதுவே வரலாறு.

    இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

    ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    தெளிவான தொலைநோக்குப் பார்வை, புதிய சித்தாந்தம், சுயநலமற்ற, யதார்த்தமான, நேர்மையான, மனப்பூர்வமான செயல்பாடு.

    அரசியலில் தலைவரின் நிலை இதுதான். அற்புதமான உரை தலைவா. அரசியல் மாற்றத்துக்கான எங்கள் நம்பிக்கை. இயக்கம் ஆரம்பமாகட்டும். இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல”.

    இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    நடிகை கஸ்தூரி கூறியதாவது:-

    ரஜினியை தவிர எங்களால் வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு மேல் தள்ளிப் போடாமல், தயங்காமல் வாங்க. என்னைப்போல் ஏராளமானவர்கள் உங்கள் வருகைக்கு காத்திருக்கின்றார்கள். நேற்றைய பிரஸ்மீட்டில் நீங்கள் பேசியது ஏமாற்றமாக இருக்கிறது.

    அரசியல் மாற்றம் வரவேண்டும் என்று சொல்லி நீங்கள் முடித்து விட்டீர்கள். இதை சொல்வதற்கு இவ்வளவு பிரத்தியேகமாக எதற்காக ஒரே ஒரு பிரஸ்மீட் என்பது எனக்கு புரியவில்லை. வெற்றி பெற்றாலும் சட்டசபைக்கு போக ஆசை இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

    என்னை பொறுத்தவரையில் இது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. அதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அ.தி.மு.க- தி.மு.க.வுக்கு விழுந்த ஓட்டுக்கள் ஜெயலலிதா, கருணாநிதிக்கு விழுந்த ஆளுமைக்கான ஓட்டு என்று. அதேபோல் உங்களுடைய ஆளுமைக்குத்தான் ஓட்டு விழும்.

    நீங்கள் கைகாட்டும் ஒருவருக்கு ஓட்டு விழும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும். நீங்கள் இருக்கும்போது இன்னொருவரை கை காட்டுவது என்பது கண்டிப்பாக அரசியல் ஆர்வலர்களுக்கு உங்களுடைய தொண்டர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருக்கும்.

    கட்சி என்று சொன்னாலே தேர்தல் அரசியல் தானே. கட்சி ஆரம்பித்தால் நீங்கள் தான் முதல் ஆளாக களத்தில் நிற்க வேண்டும். நீங்கள் தான் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர் பார்ப்பும். நீங்கள் வாங்க, உங்க பின்னாடி தமிழ்நாடே வரும். சேர்ந்து தமிழ்நாட்டை சுத்தப்படுத்தலாம் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கிறது.

    இவ்வாறு நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்
    Next Story
    ×