search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை சிறையில் கைதிகள் நடத்தும் இறைச்சிக்கடை.
    X
    மதுரை சிறையில் கைதிகள் நடத்தும் இறைச்சிக்கடை.

    மதுரை சிறை வளாகத்தில் கைதிகள் நடத்தும் இறைச்சிக்கடை

    மதுரை மத்திய சிறை வளாகத்தில் புதிதாக இறைச்சி கடை திறக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கைதிகள் மட்டுமே நடத்தி வரும் இந்த கடையில் மட்டன் மலிவான விலையில் விற்கப்படுகிறது.
    மதுரை:

    தமிழகத்தில் மதுரை மத்திய சிறைச்சாலை மிகவும் பெரியது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இங்கு அவர்களுக்கு தின்பண்டங்கள் தயாரிப்பு, பேக்கரி பொருட்கள் ஆகியவை செய்வதற்கான சிறுதொழில் பயிற்சிகள் தரப்படுகின்றன. மதுரை மத்திய சிறையில் கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக அந்த வளாகத்தில் ‘ஜெயில் பஜார்’ கடை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. எனவே அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மத்திய சிறை வளாகத்தில் புதிதாக இறைச்சி கடை திறக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கைதிகள் மட்டுமே நடத்தி வரும் இந்த கடையில் மட்டன் மலிவான விலையில் விற்கப்படுகிறது.

    மதுரை மத்திய சிறை வளாகத்தில் இறைச்சிக் கடையில் ஆட்டை உரிப்பது, கசாப்பு செய்வது, கால், தலையை தீயில் வாட்டுவது உள்ளிட்ட பணிகளில் 15 கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஒரு கிலோ மட்டன் ரூ.700, 2 கால்கள் ரூ.100, தலை ரூ.200 என்ற அளவில் விற்கப்படுகிறது.

    மதுரையில் உள்ள இறைச்சிக்கடைகளை ஒப்பிடுகையில் இங்கு 20 சதவீதம் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை ஜெயில் மட்டன் கடைக்காக சிவகங்கை சிறைச்சாலையில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் திறந்தவெளியில் வளர்க்கப்படுகின்றன. இவை அங்கிருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    மதுரை மத்திய சிறை வளாகத்தில் கால்நடை மருத்துவர்களின் ஒப்புதலுக்கு பிறகு ஆடுகள் வெட்டப்படுகின்றன. இங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 70 கிலோவுக்கும் மேல் மட்டன் இறைச்சி விற்பனை ஆகிறது.

    இதற்காக அங்கு சராசரியாக தினசரி 7 ஆடுகள் வீதம் வெட்டப்படுகின்றன. இங்கு விலை 20 சதவீதம் குறைவு என்பதால் இறைச்சி பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
    Next Story
    ×