search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்கள்
    X
    கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர்கள்

    ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி- 2 பேரை போலீசார் பிடித்தனர்

    பாளை சாந்திநகர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை பாளையங் கோட்டை சாந்திநகரில் தனியார் வங்கி ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இருப்பதால் அங்கு காவலாளிகள் யாரும் நியமிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை இந்த ஏ.டி.எம்.க்கு 2 முகமூடி அணிந்த வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் இரும்பு கடப்பாறை மற்றும் 2 கத்திகளுடன் ஏ.டி.எம்.க்குள் நுழைந்தனர். பின்னர் ஏ.டி.எம்.மில் இருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக அதனை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

    ஏ.டி.எம்.மில் அமைக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் காரணமாக வாலிபர்கள் இருவரும் ஏ.டி.எம்.மை உடைத்து கொண்டிருக்கும் போது மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு குறுந்தகவல் ஒன்று சென்றுள்ளது. அதில் நெல்லையில் உள்ள ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடப்பதாக குறுந்தகவல் சென்றது.

    இதனை பார்த்த தலைமை அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பாளை போலீசார் இந்த தகவலை பாளை குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் உடனடியாக சாந்திநகரில் உள்ள அந்த ஏ.டி.எம்.க்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு 2 வாலிபர்களும் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தனர். வாலிபர்கள் இருவரும் போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் அதற்குள் போலீசார் துரிதமாக செயல்பட்டு வாலிபர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    வண்ணார்பேட்டை பாலாஜி தெருவை சேர்ந்தவர் சேதுராமலிங்கம். இவரது மகன் சுந்தர்ராஜ் (வயது24). இவர் நெல்லையில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் முத்து (23), டிரைவர். நண்பர்களான இவர்கள் இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் 2 பேரும் சாந்திநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மை நோட்ட மிட்டு அதனை கொள்ளை யடிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி இன்று அதிகாலை அவர்கள் இருவரும் இரும்பு கம்பி, 2 கத்தி மற்றும் ஒரு டிராவல் பேக் ஆகியவற்றை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சாந்திநகருக்கு சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாததால் முகமூடி அணிந்தபடி இருவரும் ஏ.டி.எம். அறைக் குள் நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் கையும், களவுமாக பிடித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் பாளை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள் ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எதிரே உள்ள ஒரு கடையின் சி.சி.டி.வி. கேமிரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பு 2 பேரும், அதன் உள்ளே 2 பேரும் நிற்பதாக தெரிகிறது.

    இதையடுத்து ஏ.டி.எம். அருகில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களும் கொள்ளை முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாளை சாந்திநகர் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×