search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சக்திகுமார்
    X
    சக்திகுமார்

    சீனாவிலிருந்து புதுக்கோட்டை திரும்பிய ஓட்டல் அதிபர் உயிரிழப்பு- கொரோனா வைரஸ் தாக்கியதா?

    சீனா சென்றுவிட்டு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் கல்வி மற்றும் தொழில் சம்பந்தமாக சீனாவுக்கு சென்றிருந்தனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க வேண்டுமென குடும்பத்தினர் சார்பில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகம் சீனாவில் சிக்கித்தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்தபோது, அதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரும் வந்தனர். அவர்கள் டெல்லியில் மருத்துவ முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    மேலும் சீனாவில் பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பலர், இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பினர். விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சீனாவில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த 100-க்கும் மேற்பட்டோரை மருத்துவக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊர் திரும்பியவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பெயர், விவரம் தெரிந்தால் வீண் வதந்திகள் பரவி அதன் மூலம் பிரச்சினைகள் ஏற்பட்டு விடும் என்பதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் சீனா சென்றுவிட்டு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆவுடையார்கோவில் அருகே உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 42). இவர் சீனாவில் 2 ஓட்டல்கள் நடத்தி வந்தார். சமீபத்தில் சீனாவில் வைத்து அவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. உடனே புதுக்கோட்டைக்கு வந்த அவர் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

    ஓட்டலில் பணியாட்கள் இல்லாததால் சக்திகுமார் மீண்டும் சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பணியாற்றி வந்த அவருக்கு மஞ்சள்காமாலை நோய் முற்றியதையடுத்து மீண்டும் அவர் கடந்த 4-ந்தேதி புதுக்கோட்டைக்கு திரும்பினார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 14-ந்தேதி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந்தேதி சக்திகுமார் இறந்தார்.

    சீனாவில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பிய அனைவரும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். ஆனால் சக்திகுமார் திரும்பிய விவரம் சுகாதாரத்துறைக்கு அளிக்கப்படவில்லை. இதனால் அவர் கண்காணிக்கப்படாமலேயே இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் இறந்துள்ள சம்பவம் சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்திகுமார் உண்மையிலேயே மஞ்சள் காமாலை நோயால்தான் இறந்தாரா? அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×