search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு காதல்தொல்லை கொடுத்த வாலிபர்களுக்கு அடி-உதை

    நெல்லையில் காதலர்தினத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு ‘காதல்தொல்லை’ கொடுத்த வாலிபர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகள், சென்னை ஐ.டி.கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் விடுமுறை எடுத்துக் கொண்டு, ஆம்னி பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தார்.

    அதே பஸ்சில் அவருடன் வேலை பார்க்கும் 3 இளைஞர்களும் நெல்லைக்கு வந்துள்ளனர். இதில் ஒரு வாலிபருக்கு தஞ்சாவூர் என்றும், 2 வாலிபர்களுக்கு நெல்லை அருகே உள்ள நாங்குநேரி என்றும் கூறப்படுகிறது. அந்த 3 வாலிபர்களில் ஒருவர் அந்த இளம்பெண்ணுக்கு காதல்வலை வீசி உள்ளார்.

    காதலர் தினமான இன்று தனது காதலை உறுதி செய்து கொள்வதற்காக அந்த இளம்பெண்ணுடன் அவர்களும் அதே ஆம்னி பஸ்சில் வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 3 இளைஞர்களும் அவ்வப்போது, அந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

    அப்போது ஒரு இளைஞர் காதல் ‘டார்ச்சர்’ கொடுத்ததாக கூறப்படுகிறது. இது அந்த இளம்பெண்ணுக்கு பிடிக்க வில்லை. இதனால் அவர் செல்போன் மூலம் நடந்தவற்றை தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 30- க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஆம்னி பஸ்சை எதிர்பார்த்து நெல்லை வண்ணார்பேட்டை அருகே கூடி நின்றனர்.

    இன்று காலை 7 மணி அளவில் அந்த ஆம்னி பஸ் வண்ணார்பேட்டை இளங்கோநகர் அருகே வந்த போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பஸ்சை மறித்து நிறுத்தினர். அவர்கள் பஸ்சுக்குள் ‘திபுதிபுவென்று’ ஏறிச்சென்று இளம் பெண்ணை பத்திரமாக கீழே இறக்கினர்.

    அவருக்கு காதல் ‘டார்ச்சர்’ கொடுத்த இளைஞர் மற்றும் அவருடன் வந்த இளைஞர்கள் என 3 பேரையும் ‘தரதரவென்று’ கீழே இழுத்து வந்தனர். அங்கு வைத்து அந்த இளைஞர்களுக்கு சரமாரி தர்மஅடி விழுந்தது. இந்த பரபரப்பு சம்பவத்தை கேள்விபட்டு, சம்பவ இடத்துக்கு வண்ணார்பேட்டையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கூடி நின்றவர்கள், “இது இளம்பெண் சம்பந்தப்பட்ட விவகாரம், எனவே நாங்கள் போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை என்று கூறி போலீசாரை திருப்பி அனுப்பினர். அதன்பிறகு அங்கு கூடிநின்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு என்று அந்த 3 இளைஞர்களையும் ஒரு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிகடத்திச் சென்றனர்.

    அந்த இளைஞர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் இன்று காலை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×