search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரசியல் பெண் பிரமுகரை ஏமாற்றி உல்லாசத்துக்கு அழைத்து சென்ற கவுன்சிலர்

    தக்கலையில் லோன் வாங்கி தருவதாக கூறி அரசியல் பெண் பிரமுகரை ஏமாற்றி உல்லாசத்துக்கு அழைத்து சென்ற கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தக்கலை:

    தக்கலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கட்சி தொண்டர்களும், பெண் பிரமுகர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி முடிந்த பின்பு கட்சி நிர்வாகிகள் அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சிக்கு வந்த பெண் பிரமுகர் ஒருவரை அப்பகுதி கவுன்சிலர் ஒருவர், சந்தித்து பேசினார். கவுன்சிலர், பெண் பிரமுகரிடம் அவரின் குடும்பம் பற்றியும், வருமானம் குறித்தும் அக்கறையாக கேட்டார். அவரிடம் பெண் பிரமுகர், தனது வறுமை நிலை குறித்து விவரித்தார்.

    அப்போது கவுன்சிலர், தனக்கு குழு ஒன்றில் பொறுப்பு இருப்பதாகவும், அந்த குழுவில் இருந்து உங்களுக்கு லோன் வாங்கி தருகிறேன் என்றும் கூறினார்.

    லோன் வாங்க திருவட்டாரில் நடக்கும் குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும், அங்கு வந்து கையெழுத்திட்டு பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று பெண் பிரமுகரிடம் கவுன்சிலர் தெரிவித்தார்.

    லோன் வாங்கும் ஆசையில் பெண் பிரமுகரும் திருவட்டார் செல்ல ஒப்புக் கொண்டார். இதையடுத்து பெண் பிரமுகரும், கவுன்சிலரும் ஒரு ஆட்டோவில் தக்கலையில் இருந்து திருவட்டார் புறப்பட்டனர்.

    ஆட்டோ திருவட்டார் தாண்டி குலசேகரம் நோக்கி சென்றது. இதைக்கண்ட பெண் பிரமுகர், திருவட்டார் என்று கூறி விட்டு குலசேகரம் செல்கிறீர்களே? என்று கவுன்சிலரிடம் கேட்டார். அவர், கூட்டத்தை திருவட்டாரில் இருந்து குலசேகரத்திற்கும், திற்பரப்புக்கும் மாற்றி விட்டனர். நாம் இப்போது திற்பரப்பு செல்கிறோம் என்றார்.

    திற்பரப்பு அருவி அருகே சென்றதும், கவுன்சிலர், பெண் பிரமுகரை அருகில் உள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே ஒரு பெண் இருந்தார். அவர், பெண் பிரமுகரை லாட்ஜ் அறைக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார்.

    அப்போதுதான் பெண் பிரமுகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. லோன் வாங்கி தருகிறேன் என்று கவுன்சிலர் தன்னை ஏமாற்றி திற்பரப்பு அழைத்து வந்ததை புரிந்து கொண்டார்.

    உல்லாசத்திற்கு முயற்சிப்பதை அறிந்து கொண்ட பெண் பிரமுகர், லாட்ஜில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் தக்கலைக்கு வந்து சேர்ந்தார்.

    தக்கலை வந்ததும் கணவரிடம் தனக்கு நேர்ந்ததை கூறினார். பின்னர் அவர்கள் தக்கலை போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். டி.எஸ்.பி. ராமச்சந்திரனிடமும் புகார் மனு கொடுத்தனர். அவர், சம்பவம் குறித்து விசாரித்தார். மேலும் புகாருக்கு ஆளான கவுன்சிலரையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×