search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீயணைப்பு வீரர் உதவியுடன் தொழிலாளி மீட்கப்பட்ட காட்சி
    X
    தீயணைப்பு வீரர் உதவியுடன் தொழிலாளி மீட்கப்பட்ட காட்சி

    போதையில் செல்போன் டவரில் ஏறிய தொழிலாளி - மது ஆசை காட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    போச்சம்பள்ளி அருகே போதையில் செல்போன் டவரில் ஏறிய தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மது ஆசை காட்டி மீட்டுள்ளனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டி பூசாரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் அடிக்கடி மதுபோதையில் இருப்பது வழக்கம்.

    நேற்று மாலை 3 மணியளவில் அரசம்பட்டியில் உள்ள மதுபானக்கடையில் சேகர் மது அருந்தினார். பின்னர் போதையில் இருந்த அவர் மதுக்கடைக்கு எதிரே உள்ள 100 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் மீது ஏறினார்.

    இதனை கவனித்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கும்படி கூறினர். இதனை பொருட்படுத்தாத அவர் தொடர்ந்து மேலே ஏறினார். நேரம் போகப்போக அவர் கீழே இறங்காததால் இதுகுறித்து பாரூர் போலீஸ் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பாரூர் இன்ஸ்பெக்டர் கபிலன் சம்பவ இடத்திற்கு வந்து டவர் மீது ஏறினார். பாதி தூரம் வரை சென்ற அவர் சேகரை கீழே இறங்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் அவர் டவரில் இருந்து கீழே இறங்கினார்.

    டவர் மீது சேகர் ஏறிய சம்பவம் அருகே உள்ள கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. டவர் உச்சத்திற்கு சென்ற சேகர் பாக்கெட்டில் மது வைத்திருந்தது தெரியவந்தது. டவர் உச்சத்தில் நின்றபடியே அவர் மது அருந்தினார். சேகரால் கீழே இறங்க முடியாது என்பதை அறிந்த போலீசார் சேகரின், நண்பர் ஒருவரை மேலே ஏறுமாறு கூறினர். இருப்பினும் அவர் மேலே ஏறும்போது சேகர் குதித்துவிடுவாரோ என்ற அச்சம் நிலவியது. இதனால் சேகரை வசீகரம் செய்ய மதுவாங்கி வைத்திருப்பதாக கூறி, மதுபாட்டிலை காட்டியவாறு தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறினர். அப்போது விரைவாக டவரில் ஏறிய தீயணைப்பு வீரர்கள் சேகரை பிடித்தனர். உடனடியாக சேகரின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டினர். பின்னர், தீயணைப்பு வீரரின் மீது அமரவைத்து சேகரை பத்திரமாக கீழே கொண்டு வந்தனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    Next Story
    ×