search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cell tower"

    நிலம் கொடுத்த தங்களுக்கு பெல் நிறுவனம் வேலை வழங்காததால் விரக்தியடைந்த 4 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #DemandJob
    சிப்காட்:

    ராணிப்பேட்டையில் பெல் நிறுவனம் தொடங்க நிலம் கொடுத்த பலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்கியது. சிலருக்கு அந்த நிறுவனம் வேலை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி வேலை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெல் நிறுவனம் நிலம் கொடுத்தவர்களில் 109 பேருக்கு வேலை கொடுத்தது. மற்ற 15 பேர் குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு படிக்கவில்லை என கூறி அவர்களுக்கு பெல் நிறுவனம் வேலை தரவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிப்காட் பகுதியை சேர்ந்த பாலு (வயது 40), லாலாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (48), சம்பத் (40), புளியந்தாங்கலை சேர்ந்த முனிசாமி (44) ஆகிய 4 பேரும் நேற்று காலை சுமார் 8 மணிஅளவில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே உள்ள செல்போன் டவரின் மீது ஏறி, மண்எண்ணெய் மற்றும் விஷ பாட்டிலுடன், கழுத்தில் பச்சை துண்டு அணிந்து கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூச்சலிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த மற்றவர்கள் கீழே நின்று கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் டவரின் மீது ஏறியவர்களை கீழே இறங்கி வருமாறு ஒலிபெருக்கியில் பேசி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் உடன்படவில்லை.

    இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் சிதம்பரம் தலைமையில் தீயணைப்பு வீரர்களும், தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் வைத்திருந்த செல்போன் மூலம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பி.ஏ.பி. இ.ஜி.டி.யூ. ஐ.என். டி.யூ.சி.சங்க பொதுச்செயலாளர் கணேஷ், துணைத்தலைவர் தண்டபாணி, பி.ஏ.பி.எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச் செயலாளர் சிவகுமார் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி கீழே இறங்கி வர வேண்டு கோள் விடுத்தனர்.

    இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை கீழே இறங்கி வரக் கூறி தொடர்ந்து வற்புறுத்தினால் தாங்கள் எடுத்து வந்துள்ள மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டோ, விஷம் குடித்தோ தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்தனர்.

    பின்னர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தினர், நிலம் கொடுத்து வேலை கிடைக்காதோர் அமைப்பை சேர்ந்த முரளி உள்பட மற்றவர்களும் சேர்ந்து கண்ணீர் மல்க கீழே வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது உதவி கலெக்டர், தாசில்தார், போலீசார், தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள் ஆகிய அனைவரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 12 மணி அளவில் செல்போன் டவரில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரும் கீழே இறங்கி வந்தனர்.

    அவர்களில் முனிசாமி கூறுகையில், “நாங்கள் நிலம் கொடுத்து விட்டு வேலை வழங்கக்கோரி பல வருடங்களாக போராடி வருகிறோம். கல்வித்தகுதியை காரணம் காட்டி எங்களுக்கு வேலை கொடுக்க நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் குறைந்த பட்ச கல்வித்தகுதியை பாஸ் செய்து விட்டோம். எங்களுக்கு வேலை வேண்டும் அல்லது எங்களது நிலத்தை திருப்பி தர வேண்டும். வேலை தராவிட்டால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை” என்றார்.

    பின்னர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும், வேலை கிடைக்காத மற்றவர்களிடமும் உதவி கலெக்டர் வேணுசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகலில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள், நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகிய அனைவரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உதவி கலெக்டர் கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 4 மணி நேரமாக நீடித்த இந்த தற்கொலை மிரட்டல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்கள் ஏறிய செல்போன் டவர் தற்போது உபயோகத்தில் இல்லை என கூறப்படுகிறது. 
    ×