search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 16-ந் தேதி தொடங்கிய நாள் முதல் இன்று வரை பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

    அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவான புயல் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பரவலாக மழை பெய்துள்ளது.

    இதில் தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகஅளவு மழை கிடைத்துள்ளது.

    தமிழ் நாட்டில் கடந்த ஆண்டு 32 சதவீதம் மழை குறைவாக காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 11 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பி உள்ளது.

    சென்னையை பொறுத்த வரை 639.6 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஆனால், 573.9 மி.மீ அளவுக்கு மழை கிடைத்துள்ளது. 10 சதவீதம் குறைவாக உள்ளது.

    வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 26 நாட்கள் உள்ளதால் இன்னும் சில நாட்களில் மழை பெய்தால் ஒரளவு முழுமையான அளவுக்கு மழை கிடைத்து விடும்.

    இதுபற்றி தனியார் வெதர்மேன் மகேஷ் கூறுகையில், இன்னும் சில நாட்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும்.

    வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை பெய்யும். இதனால் போதிய அளவு மழைநீர் கிடைக்கும் என்றார்.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், வறண்ட மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்துள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது என்று கூறினார்.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழையால் அதிக மழை (11 சதவீதம்) கிடைத்துள்ளது. இதனால் ஏரி, குளங்கள், அணைகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தற்போதைய தட்பவெப்ப சூழல் அடுத்த வாரம் மாறி, மீண்டும் மழை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×