search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவி
    X
    திற்பரப்பு அருவி

    தமிழகம் முழுவதும் மழை நீடிப்பு - ஆறுகள், அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

    தமிழகம் முழுவதும் மழை நீடித்து வருவதால் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் மழை நீடிக்கிறது. இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், நேற்று இரவும் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களில் வகிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ள பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் கடந்த 3 நாட்களாக தாமிரபரணி கரையோர மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டம் முக்கூடலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளான பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகாமிபுரம், காட்டுநாயக்கன் தெரு மற்றும் ராஜீவ் காந்திநகர், அண்ணா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.

    முக்கூடல் ஆற்றின் கரையோரம் உள்ள முத்துமாலை அம்மன் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோவிலின் முன்பு இருந்த பழமையான வேப்பமரம் நேற்று முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
    தற்போது வெள்ளம் அதிக அளவில் வருவதால் முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், இளைஞர்களும் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிக்காமல் இருக்க முக்கூடல் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கூடல் காவல் நிலையம், முக்கூடல் பேரூராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது.

    உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையில் உள்ள தருவைகுளம் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மழைநீரானது வீணாக மணப்பாடு கடலில் கலக்கிறது.

    மேலும் தருவைகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை வெள்ளம் சூழ்ந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைக்கு கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து அறிவித்துள்ளார்.

    இதையடுத்து உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இன்றும் காலை முதல் உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, தண்டுபத்து, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, தாண்டவன்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் மொத்த நீர்மட்டம் 48 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. அணைக்கு 1985 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இங்கு முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேப்போல குழித்துறை ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடுகிறது.

    ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டணம் குருத்தமண்குண்டு கிராமத்தில் ஓடையில் தண்ணீர் அதிகரித்ததால் பெண்கள், குழந்தைகள் உள்பட 141 பேரை மீட்டு பள்ளியில் தங்க வைத்தனர்.

    ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் இன்று 8-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    புதுக்கோட்டையில் 24 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதன் காரணமாக பெரியார் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 12-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.

    திருச்சியில் திருவெறும்பூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    அரியலூர் மாவட்டத்தில் இலங்கைச் சேரி கிராமத்தில் 42 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

    வடலூர் பரவனாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பரவனாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் மேலகொளக்குடி கிராமத்தில் தண்ணீர் புகுந்தது. அங்கு வசித்த 200-க்கும் மேற்பட்டடோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6,800 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. வீராணம் ஏரி தண்ணீர் 20 கிராமங்களுக்குள் புகுந்து உள்ளது.

    கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    சுவாமிமலை அருகே உள்ள குடிதாங்கி கிராமம் கொள்ளிட ஆற்றின் நடுவில் 150க்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்த பாண்டியன், முரளி ஆகியோர் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    ஊட்டி-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கிடையே மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு வந்து தண்டவாளத்தில் விழுந்தன.

    இதையடுத்து இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பஞ்சலிங்க அருவி

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பஞ்சலிங்க அருவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அருவியில் கொட்டி வரும் தண்ணீர் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்துள்ளது. இதனால் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. ஆழியார், சோலையாறு, சிறுவாணி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    Next Story
    ×