search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெயிண்டர் அருள்தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை படத்தில் காணலாம்.
    X
    மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெயிண்டர் அருள்தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை படத்தில் காணலாம்.

    கந்துவட்டி கொடுமை: மனைவி-குழந்தைகளுடன் பெயிண்டர் தீக்குளிக்க முயற்சி

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெயிண்டர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கந்து வட்டி கொடுமையால் கடந்த 2017-ம் ஆண்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் மேலப்பாளையத்தை அடுத்த மேல கருங்குளம் பீடி காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது35), பெயிண்டர். இவரது மனைவி மாரியம்மாள் (28). இவர்களுக்கு தனலட்சுமி (8), இசக்கிராஜா (7), சூரிய பிரகாஷ் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் தனலட்சுமி 4-ம் வகுப்பும், இசக்கி ராஜா 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அருள்தாஸ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார் மண்எண்ணை கேனுடன் உள்ளே செல்லக் கூடாது என வலியுறுத்தினர். அப்போது திடீரென அருள்தாஸ் மண்எண்ணையை தனது குடும்பத்தார் மீது ஊற்றினார். மேலும் அவர் மண்எண்ணையை குடிக்கவும் செய்தார்.

    பின்னர் அவர் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். உடனடியாக பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை மீட்டு தண்ணீரை ஊற்றினர். அப்போது பெயிண்டர் அருள்தாஸ் கூறியதாவது:-

    நான் குடும்ப செலவுக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேலகுலவணிகர் புரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். அப்போது அவர் ஒரு வட்டி என கூறினார். ஆனால் அதற்கு மாறாக 10 வட்டி என என்னிடம் வசூலித்தார். இதனால் மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளேன். கடந்த 2 மாதமாக என்னால் வட்டி செலுத்த இயலவில்லை.

    இந்நிலையில் இன்று காலை பணம் கொடுத்த நபர் மற்றொருவருடன் எனது வீட்டிற்கு வந்து ரூ.1½ லட்சம் தரவேண்டும் என கூறினார். அதற்கு என்னால் அவ்வளவு பணம் தர இயலாது என கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கி உடனடியாக ரூ.1½ லட்சம் தர வேண்டும் என கந்துவட்டி கேட்டு மிரட்டி சென்று விட்டார். எனவே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ் பெக்டர் அல்லி அரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×