search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்
    X
    அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்

    ராஜீவ் கொலையை அரசியலுக்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது - அதிமுக குற்றச்சாட்டு

    ராஜீவ் கொலையை அரசியலுக்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருவதாக புதுவை சட்டமன்ற அதிமுக கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ குற்றம்சாட்டி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 48-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி உப்பளம் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.

    பின்னர் அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து அன்பழகன் பேசியதாவது:-

    தி.மு.க. எனும் தீய சக்தியை ஒழிக்க எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கம்தான் அதிமுக. இந்த இயக்கத்தின் மூலம் நமது நோக்கத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார். அவருக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளரான அம்மா அ.தி.மு.க.வை ஒப்பற்ற கட்சியாக உருவாக்கினார். 1½ கோடி தொண்டர்கள் இயக்கத்தின் உறுப்பினராக உள்ளனர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய அரசியல்வாதியாக அம்மா திகழ்ந்தார்.

    எம்.ஜி.ஆ.ரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் வளர்க்கப்பட்ட இந்த கட்சியை அழிக்க பலரும் துடிக்கின்றனர். ஆனால் கட்சியின் கடை தொண்டன் இருக்கும்வரை அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

    காங்கிரஸ்

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அ.தி.மு.க.தான் சீமானை தூண்டிவிட்டு பேசச்செய்கிறது என சொல்கிறார். சீமானை தூண்டிவிட வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. சீமான் வரம்பு மீறி பேசும்போதும், சர்ச்சைக்குரிய வகையில் பேசும்போதும் வழக்கு தொடர்ந்தது அ.தி.மு.க.தான். இது புரியாமல் தமிழக காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமி‌ஷன் இந்த கொலையில் திமுகவுக்கு தொடர்புள்ளது என கூறியது. ராஜீவ் கொலையாளியை ஆதரித்தவர்கள் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும். இவர்களோடு காங்கிரஸ் அரசியல் லாபத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். ராஜீவ் மரணத்தை அரசியலுக்குத்தான் காங்கிரஸ் பயன்படுத்தியது. மானமுள்ளவர்களாக இருந்தால் காங்கிரஸ் இந்த கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க் கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சாரம் கணேசன், அண்ணா தொழிற்சங்கம் பாப்புசாமி, நகர செயலாளர் அன்பானந்தம், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×