search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலவேம்பு கசாயம் வழங்க 100 வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    நிலவேம்பு கசாயம் வழங்க 100 வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    நிலவேம்பு கசாயம் வழங்க 100 வாகனங்கள்- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை கட்டுப்படுத்த 30 நடமாடும் மருத்துவ குழு வாகனம், 100 நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனம் மற்றும் 30 கொசு ஒழிப்பு எந்திரம் ஆகியவற்றை இன்று தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை கட்டுப்படுத்த 30 நடமாடும் மருத்துவ குழு வாகனம், 100 நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனம் மற்றும் 30 கொசு ஒழிப்பு எந்திரம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுக்க 100 நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு அக்டோபர் மாதம் வரையில் டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது, ஆனால் முற்றிலுமாக டெங்குவை அகற்றுவதே அரசின் நோக்கம்.

    ஆந்திர மற்றும் கர்நாடக எல்லைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகிறது.

    டெங்குவை ஒழிக்க தனியாக நிதி ஒதுக்கி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஒருவார காலம் சுமார் தினசரி 1 லட்சம் மக்களை இந்த வாகனம் சென்றடைய உள்ளது. இதில் உள்ள மருத்துவ மாணவர்கள் பொதுமக்களை அணுகி அவர்களுக்கு நிலவேம்பு வழங்குவார்கள்.

    வட சென்னை பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அங்கு கொசு ஒழிப்பு புகை அடிக்கும் வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க ராஜீவ் காந்தி, ராயப்பேட்டை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பொது சுகாதரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×