search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 3 பேரை படத்தில் காணலாம்
    X
    கைதான 3 பேரை படத்தில் காணலாம்

    தங்க புதையல் இருப்பதாக கூறி பண மோசடி - 3 போலிசாமியார்கள் கைது

    உத்தங்கரை அருகே தனியாக இருந்த பெண்ணிடம் தங்க புதையல் இருப்பதாக கூறி பண மோசடி செய்த போலிசாமியர்கர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது54).

    இவரது வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் நான் சாமியார் என்றும் பழனியம்மாளின் வீட்டின் நிலத்தில் ஒரு தங்க புதையல் உள்ளது என்றும், அந்த புதையலை எடுத்தால் உங்களுக்கு அதிக பணம் கிடைக்கும் என்றும் புதையல் எடுக்க நிறைய பணம் செலவு ஆகும் என்றும் கூறினார்.

    அதனை நம்பிய பழனியம்மாள் அந்த சாமியாருக்கு முதல் தவணையாக 10 ஆயிரமும், இரண்டாவது தவணையாக 50 ஆயிரம் பணமும், 3-வது தவணையாக 45 ஆயிரத்தை வங்கி மூலமும் செலுத்தியுள்ளார்.

    தொடர்ந்து சாமியார் அதிக பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    நேற்று தங்க புதையல் எடுப்பதற்கு வந்த சாமியாரை மறைந்து இருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னம்பள்ளி பகுதியை சேர்ந்த சுரேஷ் (27) என்பதும், அவர் போலி சாமியார் என்பதும் தெரியவந்தது. அவர் தங்க புதையல் இருப்பதாக கூறி பழனியம்மாளிடம் பணம் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார்.

    மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    இதில் பழனியம்மாளிடம் தங்க புதையல் எடுத்து தருவதாக கூறி போலி சாமியாரான சுரேஷ் பணம் மோசடி செய்த சம்பவத்தில் மேலும் 2 போலிசாமியார்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்கள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த பிட்சோடன் மகன் சிவா (33), தர்மபுரி மாவட்டம் அரூர் செங்குட்டையைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில்குமார் (28) என்பது தெரியவந்தது.

    நண்பர்களான சுரேஷ், சிவா, செந்தில்குமார் ஆகிய 3 பேரும் ஜோதிடம் பார்த்து பணம் சம்பாதித்து வந்தனர்.

    இந்த நிலையில் 3 பேரும் ஊர் ஊராக சென்று வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தோ‌ஷம் இருப்பதாக கூறியும் அதனை போக்க பரிகாரம் செய்வதாக கூறியும் பணம் பறித்து வந்தனர்.

    இந்த நிலையில் பழனியம்மாளிடம் அவரது வீட்டில் போலி சாமியார் சுரேஷ் தங்க புதையல் இருப்பதாகவும் அதனை எடுத்து கொடுக்க பணம் செலவு ஆகும் என்று கூறியுள்ளார்.

    மேலும், பழனியம்மாளுக்கு தோ‌ஷம் இருப்பதாகவும், அதனால் தான் அந்த புதையலை எடுக்க தாமதமாகிறது என்றும், இதற்காக கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிதான் பழனியம்மாள் முதல் தவணை பணத்தை போலிசாமியார் சுரேஷிடம், 2 மற்றும் 3வது தவணைகளில் பணத்தை சிவாவிடமும், செந்தில் குமாரிடமும் வழங்கி உள்ளார்.

    அந்த 3 பேரும் மேலும் பணம் அதிகமாக செலவாகும் என்று கூறியதால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள் போலீசில் புகார் தெரிவித்ததால் போலி சாமியார் சுரேஷ் பிடிப்பட்டார் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலிசாமியார்களான சிவா மற்றும் செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி கைது செய்தார்.

    போலிசாமியார் சுரேஷிடமிருந்து கார் மற்றும் ரூ.1லட்சத்து 25ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலிசாமியார்கள் சுரேஷ், சிவா, செந்தில்குமார் ஆகிய 3 பேரிடம் வேறு எந்தெந்த இடங்களில் தோ‌ஷம் கழிப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×