search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி- மஞ்சூர் சாலையில் தக்கர்பாபா நகர் பகுதியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.
    X
    ஊட்டி- மஞ்சூர் சாலையில் தக்கர்பாபா நகர் பகுதியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை: மண் சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை கனமழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அவலாஞ்சியில் 82, 91,45 செ.மீ. என தொடர்ந்து 3 நாட்கள் மழை பதிவானது. இதன் காரணமாக அவலாஞ்சி செல்லும் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு இதர பகுதிகளிலிருந்து அவலாஞ்சி துண்டிக்கப்பட்டது.

    எமரால்டு, லாரன்ஸ் தக்கர்பாபா நகர், புதுஅட்டு பாயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.

    புது அட்டபாயில் பகுதியில் பகல் நேரத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் அதில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 பேர் வீடுகள் மட்டுமே சேதம் அடைந்தது.

    இதே போல் தக்கர் பாபா நகர் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டியே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இன்னும் ஒரு மீட்டர் தூரம் உள்ளே சென்றிருந்தால் அங்கிருந்த வீடுகள் நிலச்சரிவில் சிக்கி இருக்கும். பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டு இருக்கும்.

    அங்குள்ள குடியிருப்பின் முன் புற கதவு வரை மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து இப்பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதனால் மாவட்ட நிர்வாகம் தக்கர் பாபா நகர் பகுதியில் உடனடியாக தடுப்பு சுவர் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவலாஞ்சியில் பெய்த கன மழையால் அதன் இணைப்பு நீர் தேக்கமான எமரால்டு நீர் தேக்கத்தில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது.

    அவலாஞ்சி-லக்கடி சாலையில் சாலை ஓரத்தில் இருந்த அருவி பகு தியில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் அருவி வழிந்தோடுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக முகாம்களில் தங்க வைக்கபட்டு இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். தற்போது 561 பேர் மட்டுமே முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டதால் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வந்த பள்ளிகளில் நாளை முதல் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு வரை மிதமான மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. இதனால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    Next Story
    ×