search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் சரிவு"

    • மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

    சென்னை:

    நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டனர்.

    மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், ஊட்டியில் மண் சரிந்து பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்தி நகர் பகுதியில் இன்று (7.02.2024) நண்பகல் தனியாருக்குச் சொந்தமான சுவர் ஒன்றை இடிக்கும் பணியில் 17 கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து 10 நபர்கள் சிக்கிய விபத்தில் ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சமி (36), உமா (35) சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமடைந்து உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24) மற்றும் மகேஷ் (23) ஆகிய 4 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது.
    • மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    உதகை:

    நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர்.

    அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 5 பேர் பெண் தொழிலாளிகள் ஆவர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    • கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர்.
    • மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

    கடந்த 4-ந்தேதி பலத்த மழை கொட்டியபோது திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.

    இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ள அந்த இடத்தில் மீண்டும் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை வழியாக போ க்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாதையை முற்றிலும் ஆய்வு செய்து மண்சரிவை சரிசெய்த பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மலைக் கோவிலுக்கு செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பஸ், கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்கள் வாகனத்தில் மலை கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். இதன்காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.
    • தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக போடி-மதுரை ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.

    இதே போல் போடி, கொட்டக்குடி, குரங்கணி, பீச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன மழை காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இவை காண்பதற்கு மிகுந்த ரம்யமாக இருந்தாலும் தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குரங்கணி போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைச்சாலையில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது.
    • தொடர் மழையின் காரணமாக வேறு சில இடங்களிலும் மண் சரிவு ஏற்படலாம் என்று தெரிகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மழையின் காரணமாக குழித்துறை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மண் சரிவால் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. இதேபோல் மதுரை-புனலூர் ரெயிலும் தாமதமாக இயக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்டது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் ரெயில்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்ற ரெயில்கள் அனைத்தும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டன.

    திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில்களும் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மெதுவாக வந்தது. தொடர் மழையின் காரணமாக வேறு சில இடங்களிலும் மண் சரிவு ஏற்படலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை ரெயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கன மழையாக வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரம் இடை விடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ஏரிச்சாலை, கலையரங்கம், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த திடீர் மழையினால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். மாலையில் பெய்த மழையினால் அவர்கள் விடுதிக்கும் திரும்ப முடியாமல் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் தவித்தனர். மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    செண்பகனூர் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வத்தலக்குண்டு மலைச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நகராட்சி மண் அள்ளும் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட மண் சரிவுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், ஒரு சில நாட்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்கு பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியிலும் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே கன மழை சீசனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    கொடைக்கானலில் ஒரே நாளில் 5 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
    • விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
    • மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் முக்கோல பிச்சோட்டு கோணம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் வீட்டில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

    இடிவு மண்ணை அகற்றி விட்டு, பழைய குழாயை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் அடிப்பகுதியில் நேற்று முன்தினம் மகாராஜன் இறங்கினார். அவருக்கு சற்று மேலே இருந்த இடத்தில் மணிகண்டன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் இடைப்பகுதியில் மண் இளக்கமும், தண்ணீர் சலசலப்பும் இருந்ததை கிணற்றின் மேலே நின்றவர்கள் உணர்ந்தனர்.

    இதனால் கிணற்றுக்குள் இருந்த இருவரையும் மேலே வரும்படி கூறினர். இதையடுத்து மகாராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கயிறை பிடித்து கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் மண்சரிவு ஏற்பட்டது.

    மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விழிஞ்சம், சாக்கை தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் விரைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மீண்டும் மண் சரிவு செய்யப்பட்டது.இதனால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்ட கிணற்றில் கிணறு தரை மட்டத்தில் இருந்து 45 அடி ஆழம் வரை கிணற்றின் உள் விட்டம் 4 அடி ஆகும். அதற்கு கீழ் 45 அடி ஆழம் வரை உள் வட்டம் 3 அடியாகும். கிணற்றின் அடிப்பகுதியில் 20 அடி உயரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளது.

    அதில் மகாராஜன் சிக்கி இருக்கலாம் என கருதப்பட்டு மீட்பு பணி துரிதப்பட்டுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் உள்ள தண்ணீர் மற்றும் சகதியை அகற்றப்பட்டு தொழிலாளி மகாராஜனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அவரை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நீடித்தது. அவர் மண்சரிவில் சிக்கி இன்று காலையுடன் 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவரது கதி என்ன ஆனது? என்று அனைவர் மத்தியிலும் கவலை ஏற்பட்டது. இருந்த போதிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜன் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்பு படையினர் கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகாராஜன் பிணமாக மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி மீட்பு குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

    • மின்கம்பமும் சாய்ந்ததால் மக்கள் அச்சம்
    • பொதுப்பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும்

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே காவஸ்தலம் சந்திப்பில் இருந்து மணலிவிளை செல்லும் ரோடு பகுதியானது பட்டணங்கால்வாய் சானல் கரையோரம் பகுதியாகும்.

    இந்த சானல் இரண்டு பகுதிகளிலும் ஏராளமான வீடுகள் உள்ளது தினமும் இந்த பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள் வாகனம் அதிகம் செல்கிறது. அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள் அமைந்துள்ளது. பள்ளி வேன்கள் இந்த பகுதியாக தான் செல்கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வந்தது. குலசேகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.

    இதனால் சானல் கரை யோரம் இருந்த பகுதிகள் மிக மோசமாக இருந்தது. காவஸ்தலம் சந்திப்பில் இருந்து செல்லும் ரோடு நேற்று பெய்த மழையில் சானலின் கரையோர பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி யில் விரிசல் ஏற்பட்டது அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதன் அருகில் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின்கம்பமும் சரிந்து நிற்கிறது. எனவே பொதுப் பணித்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து உடனே அந்த பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.
    • கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல்-பழனி ரோட்டில் சவரிக்காடு பகுதியில் கடந்த மாதம் கொட்டி தீர்த்த கனமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த சாலையில் சீரமைப்பு பணிக்கு பிறகு இலகுரக வாகனங்கள், பஸ், லாரிகள் இயக்கப்பட்டன. தற்போது கடந்த 2 நாட்களாக பழனி மற்றும் கொடைக்கானலில் பெய்த கன மழை காரணமாக தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொண்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    தற்போது மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மீண்டும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி செங்குத்தாக உள்ளது. இதில் மண் மூட்டைகள் சரிந்துள்ளன. இவை 2 நாட்களுக்குள் சரிசெய்யப்படும். பணிகள் எச்சரிக்கையாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் சுவர் அமைத்தால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டாது. இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக திருச்சி ரோடு, மெயின்ரோடு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தீபாவளி பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கன மழைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    திண்டுக்கல் 56.2, பழனி 46, சத்திரப்பட்டி 10.4, நத்தம் 30, நிலக்கோட்டை 8, வேடசந்தூர் 44.5, காமாட்சிபுரம் 51, கொடைக்கானல் போட் கிளப் 31.2, ரோஸ்காடன் 28 என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 349.8 மி.மீ மழை அளவு பதிவானது.

    • பச்சைமலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
    • வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியான எட்டெருமைபாலி அருவியில் செந்தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமான பச்சைமலையில் தொடர் கனமழை பொழிந்து வருகிறது. உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்திலிருந்து வனத்துறைக்கு சொந்தமான டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலை, சேதமடைந்திருந்த நிலையில், சமீபத்திய தொடர் கன மழையால் மண்சரிவு, சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலை குண்டும், குழியுமாக மாறி சாலை போக்குவரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.

    சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், பேருந்துகள் அடிக்கடி பழுதாவதுடன் டயர் பஞ்சராகி நடுவழியில் நிற்கும் அவலம் தொடர்கிறது. நேற்று மதியம் டாப்செங்காட்டுப்பட்டி சென்ற அரசுப் பேருந்து நடுவழியில் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து, ஒரு மணி நேரம் பாதிப்படைந்ததுடன், மாலைவாழ் பயணிகள் குழந்தைகளுடன், சாலையில் அமர்ந்திருந்தனர்.

    இந்த தொடர் கன மழையால் பச்சைமலையிலுள்ள அருவிகள், காட்டாறுகளில் செந்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியான எட்டெருமைபாலி அருவியில் செந்தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது. எனவே ஆபத்தை உணர்ந்து அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காட்டாற்று வெள்ளத்தால் மலைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையின் நடுவில் விழுந்தது.
    • இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தால் மலைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையின் நடுவில் விழுந்தது.

    இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏற்காட்டிற்கு வரும் வாகனங்கள் குப்பனூர் வழியாக திரும்பி விடப்பட்டது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மண் சரிவு ஏற்பட்ட மலைப் பாதையை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு துணை தலைவர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோகிலா, சின்னவெள்ளை, ஓன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் புஷ்பராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×