search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ் எம்எல்ஏ
    X
    கருணாஸ் எம்எல்ஏ

    மணிகண்டன் அமைச்சர் பதவி பறிப்புக்கு எனது புகாரும் காரணம்- கருணாஸ்

    மக்கள் பணி செய்ய இடையூறு செய்ததாக மணிகண்டன் மீது புகார் அளித்ததால் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.
    ராமநாதபுரம்:

    திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கருணாஸ், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவை சந்தித்து, தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளில் அரசியல் கட்சியினர் தலையீடு இருப்பதாக புகார் தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாடானை தொகுதியில் 22 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் தலையிடுவதாக எனக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. புகார்கள் குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்து, நான் வெளிப்படையாகவே முதல்வரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையல்ல.

    அரசு கேபிள் டி.வி. தலைவர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து விமர்சனம் செய்ததால், அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.

    எனவே காக்கை உட்கார்ந்து பனம் பழம் விழுந்த கதையாக,போய் விட்டது.

    என்னால் தான்அவர் பதவி பறிக்கப்பட்டது என சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம்.

    மணிகண்டன் எனது தொகுதியில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முட்டுக்கட்டையாக இருந்தார்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் அவர் மறைந்துவிட்டார். எனக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி போதும். அதேபோல் பதவிகள் வரும்போது பணிவு இருக்க வேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டதற்கு அவரது கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது எனக்கு வியப்பாகவும் அதே நேரத்தில் வேதனையாகவும் இருந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×