search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதும் காவிரியாற்றில் மலர் தூவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதும் காவிரியாற்றில் மலர் தூவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் முதலமைச்சர்

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீரை திறந்துவிட்டார்.
    சேலம்:

    தமிழகத்தின் ஜீவாதாரமாக விளங்கும் மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். வழக்கமாக 90 அடியை தாண்டும்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் திறப்பு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து மாறுபடும்.

    கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு பருவமழை தவறியதாலும், போதுமான நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து இல்லாததாலும் 8 ஆண்டுகளாக குறிப்பிட்ட தேதிகளில் அணை திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு தாமதமாக ஜூலை 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் குறுவை சாகுபடி பாதித்த நிலையில் சம்பா சாகுபடிக்காகவாவது தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இதற்கிடையே கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன மழை கொட்டியதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

    இதனால் அந்த அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நீர்வரத்து 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டி உள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 9 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீரை திறந்துவைத்தார். அப்போது அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரை எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள் பூ தூவி வரவேற்றனர்.

    முதலில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது. நாளை மறுநாள் கல்லணைக்கு இந்த தண்ணீர் சென்றடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டாவுக்குட்பட்ட 12 மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் 12 மாவட்ட விவசாயத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல மேட்டூர் அணை வலது மற்றும் இடது கரை கால்வாயிலும் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணையின் அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைக்கல்மேடு, ஊராட்சி கோட்டை மற்றும் கோனேரிப்பட்டி கதவணைகள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சார உற்பத்தியும் உடனடியாக தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை திறந்து விடப்படும். அதன்பிறகு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அணையின் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறப்பு 15 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர் அணை வரலாற்றில் 86-வது தடவையாக இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதில் 16 முறை குறிப்பிட்ட தினமான ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் அணையில் திருப்திகரமான தண்ணீர் இருந்ததால் ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டது. 11 ஆண்டுகள் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
    Next Story
    ×