search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி
    X
    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி

    பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் பில்லூர் அணை அமைந்துள்ளது.

    நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அணை நீர் ஆற்றுப் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் நீர் மட்டம் மொத்தம் 100 அடியாகும். கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக இருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, பவர் ஹவுஸ் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்ததால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1443 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணை நீர் மட்டம் உயர்ந்து 88.50 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4.25 அடி உயர்ந்து நேற்று 92.75 அடியை எட்டியது.

    பில்லூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 91.108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7056 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 89.75 அடியாக இருந்தது.

    பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அவர்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தண்டோரோ மூலமும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

    இது தவிர மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவானி ஆற்றில் கரையோர பகுதிகளில் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பில்லூர் அணையில் இருந்து 2 எந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரு எந்திரங்களை இயக்கினால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து விடுகிறது. எந்திரங்களை இயக்குவதை நிறுத்தினால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்.

    பவானி ஆற்றில் செல்லும் நீர் பவானி சாகர் அணையை சென்றடைவதால் அந்த அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


    Next Story
    ×