search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- பாலகிருஷ்ணன்
    X

    சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- பாலகிருஷ்ணன்

    காவிரி பிரச்சனை, வறட்சி, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை பற்றி விவாதிப்பதற்காக உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
    திருவாரூர்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கூடங்குளத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1 மற்றும் 2-வது அணு உலைகள் கடந்த 2 ஆண்டுகளில் 60 முறை பழுதடைந்து, பின்னர் சரி செய்யப்பட்டு இயங்கி வந்திருக்கின்றன. அடிக்கடி பழுதாவதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதே வளாகத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளை மத்திய அரசு நிறுவி வருகிறது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த பகுதியையே அணு உலை பூங்காவாக மாற்ற இந்த அரசு முயற்சித்து வருகிறது.

    அதேபோல் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து கேள்வி எழுப்புவர்கள். ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை பார்க்கும்போது தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக மனித சங்கிலி போராட்டம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    எதற்கெடுத்தாலும் நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் போராட வேண்டும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி வைத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொறுத்தவரை இத்திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராடும்.

    தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால் தண்ணீரை சேமிக்க இந்த அரசு எந்த ஒரு திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை. 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. மந்திரி பதவிக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் டெல்லிக்கு சென்ற தமிழக ஆட்சியாளர்கள், காவிரி பிரச்சனை குறித்து ஆணையத்திடமும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க அண்டை மாநிலங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை ஏற்படுத்த முன்வரவில்லை.

    தற்போதைய சூழலில் மிக முக்கியமாக காவிரி பிரச்சனை, தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை பற்றி விவாதிப்பதற்காக உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×