search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்: 20 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் - சீமான்
    X

    பாராளுமன்ற தேர்தல்: 20 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் - சீமான்

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். #Seeman #NaamTamilarKatchi
    கும்பகோணம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்தது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம்ராஜன் ஆகியோர் கூறி உள்ளனர். இதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

    மத்திய அரசு தற்போது தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள சலுகைகளை கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாக்கல் செய்யவில்லை? விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி உள்ளனர். இந்த அறிவிப்பு எப்போது செயலாக்கம் பெறும்? மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக கூறி உள்ளனர். அதை எப்போது அமைப்பார்கள்? இந்த அறிவிப்புகள் அடுத்த தேர்தலில் பா.ஜனதா வென்றால்தான் செயல் வடிவம் பெறும்.

    தனியார் முதலாளிகள் வாங்கிய ரூ.3 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் மாணவர்களின் கல்வி கடன் ரூ.65 ஆயிரம் கோடி தான் உள்ளது. அதை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். மத்திய அரசு, முதலாளிகளின் முகவர்போல செயல்படுகிறது. மக்களுக்கான நலன் பேணுகிற அரசாக இல்லை.



    மத்திய அரசிடம், தமிழக அரசு தனது உரிமைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் என்பவர் பெயரளவுக்கு மட்டுமே உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை போன்ற துணிச்சல் நமது மாநில முதல்-அமைச்சருக்கு இல்லையே என்ற வருத்தம் தான் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளோம்.

    மணியரசனின் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். மற்றவர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார். #Seeman #NaamTamilarKatchi

    Next Story
    ×