search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டுக்கோட்டை சிவகொல்லையில் சுவர் இடிந்து பலியான 4 பேரின் குடும்பத்தினரை வைகோ சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.
    X
    பட்டுக்கோட்டை சிவகொல்லையில் சுவர் இடிந்து பலியான 4 பேரின் குடும்பத்தினரை வைகோ சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.

    தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து விட்டது- வைகோ

    கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #GajaCyclone #MDMK #Vaiko
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    முதலில் பட்டுக்கோட்டைக்கு வந்த வைகோ, பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கஜா புயலினால் 120 அடி உயர மனோராக்கள் இடிந்து விழுந்ததைப் பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் சேதவிவரங்களை கேட்டறிந்தார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை சிவகொல்லையில் கஜா புயலால் வீட்டு சுவர் இடிந்து பலியான 4 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறேன். கஜா புயலால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    தமிழ்நாட்டில் பல புயல்களைப் பார்த்திருக்கிறேன். எந்த புயல் வந்தாலும் 1 மணி நேரத்திற்குள் போய்விடும். ஆனால் இந்த கஜா புயல் 5 மணி நேரம் அடித்து விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது.

    மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் செலவில் இரும்பினால் ஆன படகை அரசே வழங்க வேண்டும். தென்னை மரங்கள் அனைத்தும் விழுந்து விட்டன. ஒரு தென்னை மரத்திற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் வந்து பார்த்துச் சென்றதால் நஷ்டத்தை கணிக்க முடியுமா? கீழே விழுந்த தென்னை மரங்களை பார்க்க முடியுமா? இனி விவசாயக் குடும்பங்கள் ஒரு தலைமுறைக்கு தலை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் 1 லட்சம் விவசாய குடும்பங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு சிறப்பு திட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    50 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இன்றைக்கு சோறு வாங்க வரிசையில் நிற்பதை பார்த்தேன். கோடீஸ்வரராக இருந்தவர்கள் ஒரேநாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள். இந்த புயலில் போலீஸ்காரர்கள், மின்சார ஊழியர்கள், அதிகாரிகள், கலெக்டர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MDMK #Vaiko
    Next Story
    ×