search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை கவிஸ்ரீ.
    X
    கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை கவிஸ்ரீ.

    கள்ளக்காதலுக்கு இடையூறு- 3 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்

    கோவை சரவணம்பட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி 3மாத குழந்தையை கழுத்தை அறுத்து தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வனிதா (22). இவர்களுக்கு 2 வயதில் சசிபிரியா, 3 மாதமே ஆன கவிஸ்ரீ என்ற குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் தொட்டிலில் தூங்க வைத்த 3 மாத குழந்தையை யாரோ மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக வனிதா சத்தம் போட்டார்.

    இதுகுறித்து கணவருக்கு தகவல் கூறி வரவழைத்தார். அவர் போலீசில் புகார் செய்தார். சம்பவஇடத்துக்கு சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்றனர். வனிதாவிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் பெற்ற குழந்தையை கொலை செய்ததாக வனிதா கூறினார்.

    வனிதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் (26) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவர் வேலைக்கு சென்ற பின்னர் வனிதா, கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சீனிவாசனுடன் சேர்ந்து குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வனிதா ஒப்புக்கொண்டார். வீட்டின் அருகே உள்ள குப்பை மேட்டில் சாக்குபைக்குள் இருந்து, குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். இதையடுத்து அவரையும், சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். வனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த சீனிவாசன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கமானார். அவரது பேச்சு எனக்கு பிடித்து போனதால் நான் அவருடன் நெருங்கி பழகினேன். எனது கணவர் வேலைக்கு சென்ற பின்னர், சீனிவாசன் வீட்டுக்கு வருவார்.

    நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்தனர். எனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு, என்னால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை என கூறி மூத்த மகளை திண்டுக்கல்லில் உள்ள எனது தாய் வீட்டில் விட்டு விட்டு வந்தேன். அதன்பிறகு சீனிவாசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். நாங்கள் உல்லாசமாக இருந்த போது குழந்தை கவிஸ்ரீ அழுது கொண்டே இருந்தாள். இது எங்களுக்கு இடையூறாக இருந்தது.

    எனவே குழந்தையை கொன்று விடலாம் என முடிவு செய்தேன். நேற்று சீனிவாசன் வீட்டுக்கு வந்த போது குழந்தையை கொலை செய்யலாம் என கூறி நான் குழந்தையின் கை, கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சீனிவாசன் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் ரத்தக்கறை படிந்த எனது நைட்டி, துணிகளை குப்பையில் போட்டு வெளியே சென்று கொட்டினேன்.

    பின்னர் அரிசி சாக்கு பைக்குள் குழந்தையை அடைத்து வீடு அருகே உள்ள குப்பை மேட்டில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு வந்தேன். சீனிவாசன் வீட்டுக்கு சென்ற பிறகு, வீட்டில் இருந்த குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக நாடகமாடினேன். ஆனால் போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையை மர்மநபர்கள் கடத்தி சென்று விட்டதாக புகார் வந்ததும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். வனிதா முன்னுக்கப்பின் முரணாக பேசியதால் அவர் மீது சந்தேகம் எழவே, அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறிது நேரத்துக்கு முன்பு வனிதா, சீனிவாசனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறினார்.

    இதுகுறித்து வனிதாவிடம் போலீசார் கேட்ட போது சீனிவாசன் வீட்டுக்கு வரவில்லை என்றார். சிறிது நேரத்தில் குப்பையை கொட்டுவதற்காக அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் மழுப்பினார். தொடர்ந்து போலீசார் பல கேள்விகள் கேட்டதும் பதிலளிக்க முடியாமல் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலைக்கு பயன்படுத்திய கத்தி, ரத்தக்கறை படிந்த நைட்டி மற்றும் துணிமணிகள், சாக்குபை ஆகியவற்றை ஆதாரங்களாக போலீசார் கைப்பற்றினர்.

    கைதான வனிதா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
    Next Story
    ×