search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு 1 ரூபாய் அபராதம் விதிப்பு
    X

    வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு 1 ரூபாய் அபராதம் விதிப்பு

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர்.
    மசினகுடி:

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோவையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினகுடிக்கு வந்துள்ளார். மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து வந்து உள்ளனர். புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர்மின்நிலையத்தையும் வீடியோ எடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 10 பேரையும் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சேர்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு சிறிய தொகையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோசுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சிறந்த சுற்றுலா தலமாகவும், வனவிலங்குகளின் புகலிடமாகவும் விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் பெருந்தொகை அபராதமாக விதிக்காமல் 1 ரூபாயை மட்டும் அபராதம் விதித்து உள்ளனர். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தது கண்டனத்துக்குரியது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தவறான முன் உதாரணமாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×