search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் ரசிகர்களுக்கே முக்கியத்துவம்- கமல் முடிவு
    X

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் ரசிகர்களுக்கே முக்கியத்துவம்- கமல் முடிவு

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி புதுக்கட்சியை தொடங்கிய கமல் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை தனது ரசிகர்கள் மூலமாக அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொண்டார்.

    கமல் புதிய கட்சியை தொடங்கி 100 நாட்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் மகளிர் அணியினருக்கான மாநாட்டை நடத்தியதுடன், திருவள்ளூர் மாவட்டம் அதுகத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    கட்சியில் இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ள கமல், கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

    கட்சியின் பல்வேறு அமைப்புகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

    நற்பணி இயக்கம் என்ற பெயரில் கமல் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் மூலமாக ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இப்படி நற்பணிகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் ரசிகர்களுக்கே மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை கமல் வழங்க உள்ளார். இதற்காக அவர்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளார். அப்போது நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கூடுதலாக பெண் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இது போன்று பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் ரஜினி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த போது மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இதனை பயன்படுத்தி அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்கவும் மாநில நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். பொது மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக கமல் தொடங்கிய மய்யம் விசில் செயல் மூலமாக மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த செயலியில் தினமும் 500 புகார்கள் குவிகிறது. இந்த புகார்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கமல் அறிவித்துள்ளார். இப்போது அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த 2 மாதங்களில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் கமல் முடிவு செய்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    Next Story
    ×