search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திய காட்சி.

    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் - பெண்கள் உள்பட 60 பேர் கைது

    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை பிப்ரவரி 16-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை.

    தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. காவிரி பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல்தான் காரணம்.

    அதில் தங்களுக்கு பாதகமாக முடிவு அமைந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது.

    காவிரி தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தி கேள்விகுறியாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×