என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது.
    • பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

    இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது. முதலில் பாகிஸ்தான் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். இன்னொரு பக்கம் அமெரிக்கா தனது கடைசி இரு லீக்கில் (இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக) தோற்க வேண்டும். இவ்வாறு நடந்து ரன்ரேட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு சூப்பர்8 கதவு திறக்கும்.

    சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை சாதாரணமாக எடுத்து விட முடியாது. அமெரிக்காவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்து தோல்வி அடைந்த கனடா, அயர்லாந்துக்கு எதிராக 12 ரன்னில் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. எனவே பாகிஸ்தானுக்கு கடும் சோதனை அளிக்க கனடா வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

    • 2014-ம் ஆண்டு விராட் கோலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு டேனி வியாட் வேண்டுகோள் விடுத்தார்.
    • அர்ஜுன் டெண்டுல்கரும் டேனி வியாட்டும் பலமுறை உணவகங்களில் ஒன்றாகக் காணப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனி வியாட், தனது நீண்ட கால காதலியான ஜார்ஜி ஹார்ஜை நேற்று (ஜூன் 10ம் தேதி) இங்கிலாந்தின் லண்டனின் உள்ள செல்சியா ஓல்ட் டவுன் ஹாலில் திருமணம் செய்து கொண்டார். வியாட் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ஜார்ஜி ஹாட்ஜ். ஹாட்ஜ் கால்பந்து அணியின் மேலாளராக இருந்து வருகிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    இதுகுறித்து வியாட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த திருமண புகைப்படத்தில், இருவரும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தம்பதிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


    இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீராங்கனை டேனி வியாட், கடந்த 2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சமூக வலைதளங்களில் ப்ரோபோஸ் செய்தார். அதன்பிறகு, விளையாட்டுக்காக அப்படி தெரிவித்தேன் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    மேலும், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் டேனி வியாட்டுக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் பலமுறை உணவகங்களில் ஒன்றாகக் காணப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.


    டேனி வியாட் இங்கிலாந்து அணிக்காக இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 129 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், இங்கிலாந்துக்காக 110 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1907 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். மேலும், வியாட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 156 டி20 போட்டிகளில் 2726 ரன்கள் எடுத்துள்ளார். இதில், இரண்டு சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும்.

    இங்கிலாந்து அணிக்காக டேனி வியாட் கடந்த 2010-ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் அறிமுகமானார்.

    • 23-வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
    • இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை அதிகாலை நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பானது கேள்விகுறியாக மாறியுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனகா பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100-வது போட்டியை விளையாடவுள்ளார். இதன்மூலம் இலங்கை அணிக்காக 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் எனும் சாதனையையும் தசுன் ஷனகா படைக்க உள்ளார். இதற்கு முன் வேறெந்த இலங்கை வீரரும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை.

    இலங்கை அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகமான தசுன் ஷனகா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ளார். 5 அரைசதங்களுடன் 1456 ரன்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் 32 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

    • வங்காளதேசத்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி பல சாதனைகளை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் மிக குறைந்த இலக்கை கட்டுப்படுத்திய அணி எனும் சாதனையை பதிவுசெய்துள்ளது. முன்னதாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் 120 ரன்களைக் கட்டுப்படுத்தியதே சாதனையாக இருந்தது அதனை தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.

    மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி 5-வது முறையாக 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. வேறெந்த அணியும் இரண்டு முறைக்கு மேல் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்ததில்லை. மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்திற்கு எதிராக 9-வது முறையாக தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெதுள்ளது.

    • ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் போட்டியில் பேட்டிங் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட் ஒருவரே தாக்கு பிடித்து ஆடினார். அபாரமான பந்துவீச்சால் வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட தோற்க வேண்டிய ஆட்டத்தில் வெற்றி அமைந்தது. அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராட் கோலி 2 ஆட்டத்திலும் தொடக்க வரிசையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடலாம். கோலி மிடில் வரிசையில் களம் இறங்கலாம். ஷிவம் துபே கழற்றி விடப்படலாம்.

    சூர்ய குமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 2 ஆட்டத்திலும் வெற்றியை பெற்றதால் மாற்றம் செய்ய அணி நிர்வாகம் விரும்பாது.

    பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா , அக் ஷர் படேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

    இந்தியாவை போலவே மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை சூப்பர் ஓவரிலும் வீழ்த்தி இருந்தது.

    இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து அமெரிக்கா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி உள்ளது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.
    • அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் பிரெஞ்சு ஓபனை 4 வது முறையாக வென்ற போலந்தின் இகா ஸ்வியாடெக் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக தொடருகிறார். அமெரிக்காவின் கோகோ காப் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார். 2 வது இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா 3 வது இடத்துக்கு சரிந்தார்.

    பிரெஞ்சு ஓபனில் இறுதிசுற்று வரை முன்னேறி ஆச்சரியப்படுத்திய இத்தாலி வீராங்கனை பாவ்லினி 15 ல் இருந்து 7 வது இடத்துக்கு வந்துள்ளார். அவர் டாப் 10 இடத்திற்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இத்தாலி இளம் வீரர் ஜானிக் சினெர் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 'நம்பர் ஒன்' இடத்தை அலங்கரிக்கும் முதல் இத்தாலி நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை முதலிடத்தில் இருந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் காயத்தால் 4 வது சுற்றுடன் வெளியேறியதால் நம்பர் ஒன் இடத்தை பறிகொடுத்ததுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 428 வாரங்கள் முதலிடத்தில் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முதல்முறையாக சொந்தமாக்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் உயர்ந்து 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் சுமித் நாகல் கிடுகிடுவென 18 இடங்கள் எகிறி 713 புள்ளிகளுடன் 77 வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நாகல் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளார்.

    ஒற்றையர் தரவரிசையில் முதல் 56 இடங்களை வகிக்கும் வீரர், வீராங்கனைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆனால் தரவரிசையில் முன்னணியில் இருந்தாலும் ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் ஒலிம்பிக்குக்கு செல்ல அனுமதி கிடையாது.

    உதாரணமாக ஆண்கள் பிரிவில் முதல் 56 இடத்திற்குள் 7 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மட்டுமே ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியும். அடுத்த இடங்கள் தரவரிசையில் பின்தங்கி உள்ள வேறு நாட்டு வீரர்களுக்கும் செல்லும். அந்த வகையில் நாகல் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும் நிலையில் இருக்கிறார். 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பை பெறுகிறார்.

    • டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார்.

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி ஆஸ்திரேலயா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார். ஆனால் அப்பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அப்பந்தை தவிர்த்தார். ஆனால் அம்பயர் நித்தின் மேனன் அப்பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.

    இதனால் கோபமுற்ற வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அவதூராக பேசி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் ஆஸ்திரேலயா வீரர் வேட் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். எனினும், இந்த சம்பவத்தில் மேத்யூ வேட் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேத்யூ வேட்-க்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் தான் அம்பயரிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.

    • கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகை வந்திருந்தார்.
    • கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

    உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 18 ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அணிந்திருந்த செயின் (லாக்கெட்) இணையத்தில் வைரலானது. அவரது படத்துடன் வைரலான வீடியோவில், நியூயார்க் மைதானத்தில் விராட் கோலியின் படத்துடன் கூடிய லாக்கெட்டை கழுத்தில் அணிந்திருந்த பாகிஸ்தான் ரசிகை என பதிவிடப்பட்டிருந்தது.

    இந்த ரசிகை ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளையும் நான் ஆதரிக்கிறேன் என அவர் பேட்டி அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது அவர் கோலி படத்துடன் கூடிய லாக்கெட்டை அணிந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.


    • டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் டி20 போட்டி நடக்கும் போது நேரலை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ஒரு சீக்கியர் என்பதால் அவரை அவதூராக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நீங்கள் சீக்கியர்களை பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்களை பற்றியும் அவர்களது வரலாற்றை பற்றியும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள். உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதிரிகள் கடத்தப்பட்ட போது நேரம் காலம் பார்க்காமல் சீக்கியர்கள் காப்பாற்றினார்கள். அதனால் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுங்கள். உங்களை நினைக்கும் போது வெட்க கேடாக இருக்கிறது," என்று பதிவு செய்துள்ளார்.

    இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கம்ரன் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் சமீபத்தில் சொன்ன கருத்தை நினைத்து வேதனை அடைகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வார்த்தை மரியாதை தக்கதல்ல. எனக்கும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை," என கூறியிருக்கிறார்.

    • டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களான தன்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 9 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹித் மற்றும் மஹ்மதுல்லா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் முறையே 37 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, நார்ட்ஜே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • கிளாசன் 44 பந்துகளில் 46 ரன்களுடன், டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    வாஷிங்டன்:

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் சென்று பார்த்துள்ளார்.
    • இவரது பதவிக்காலத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினார்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேற்று நேரில் சென்று பார்த்துள்ளார்.

    இந்த நிலையில் தான் இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினார். இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.

    அண்மையில் நடந்து முடிந்த 2023 - 24 -ம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி சீசனில் மும்பை டிராபியை கைப்பற்றியதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அமோல் கலேயின் பங்கு முக்கியத்துவம் பெருகிறது. அமோல் கலே ஸ்டிரீட் பிரீமியர் லீக்கின் கோர் கமிட்டியிலும் இருந்தார்.

    அவர், மும்பை டி20 லீக் தொடரை புதுப்பிக்க திட்டமிட்டிருந்தார். சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊதியம் வழங்குவதைப் போன்று மும்பை வீரர்களும் போட்டி கட்டணத்தை பெறுவார்கள் என்ற முடிவை மும்பை கிரிக்கெட் சங்கம் எடுத்த போது அமோல் கலே பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் தான் அமெரிக்காவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்த்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது சங்கய் நாயக் துணை தலைவராக இருக்கும் நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இடைக்கால பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×