search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்காட்லாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
    X

    ஸ்காட்லாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

    ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvPAK #PAKvSCO

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி எடின்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், அகமது ஷெசாத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷெசாத் 33 ரன்களிலும், ஜமான் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹுசைன் தலாட் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 



    அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் சர்பராஸ் அகமது 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷோயிப் மாலிக் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினார். மற்றவர்கள் பிராகசிக்க தவறியதால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. மாலிக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் மைக்கெல் லீஸ்க் 3 விக்கெட்களும், கிறிஸ் சோலே 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்செர் ஆகியோர் களமிறங்கினர். முன்சே முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.  அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் நிதானமாக ரன் சேர்த்தனர். அவர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். கொயிட்செர் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.



    அதைத்தொடர்ந்து வந்த கலம் மெக்லியோட் 26 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 14.4 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்களும், உஸ்மான் கான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். #SCOvPAK #PAKvSCO

    Next Story
    ×