search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி
    X

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு இன்று மாலை 4 மணிக்கு பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி

    • மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முழுமையாக பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் பிரதமர் மோடி அதை கண்டு கொள்ளவில்லை.

    இந்தநிலையில் மணிப்பூர் விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

    அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முன்தினம் பாராளுமன்ற மக்களவையில் விவாதம் தொடங்கியது. முதல் நாள் காங்கிரஸ், பா.ஜ.க. தரப்பில் எம்.பி.க்கள் பேசினார்கள். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று நடந்த விவாதம் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் இருந்தது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைத்து பேசுகையில் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? மணிப்பூர் கலவரத்தை ராணுவத்தை அனுப்பி கட்டுப்படுத்தாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "பா.ஜனதா செய்து வரும் அரசியல் மணிப்பூர் மாநிலத்தை மட்டும் கொல்லவில்லை. இந்தியாவையே கொன்று விட்டது. இந்தியாவை கொல்வதன் மூலம் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்" என்று பகிரங்கமாக பேசினார்.

    அதற்கு மத்திய மந்திரிகள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசினார்கள். அமித்ஷா பேசுகையில், "மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அமித் ஷா விளக்கி கூறினார்.

    அமித் ஷா தனது பேச்சை முடிக்கும் போது மணிப்பூரில் அமைதி ஏற்பட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த தீர்மான நகல்கள் எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்டது.

    அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா வாசித்தார். இதையடுத்து பாராளுமன்றத்தில் அந்த தீர்மானம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

    இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பட்டது. பின்னர் அவை தொடங்கிய போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். கடந்த 2 நாட்களில் பெரும்பாலான கட்சிகளுக்கு இந்த தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே இன்று இவர்களுக்கு குறைந்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் தொடர்ந்து வாதம் செய்தனர். மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதனால் பாராளுமன்றத்தில் இடைஇடையே அமளி ஏற்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி பேச உள்ளார். இதனால் பிரதமர் மோடியின் பதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் எத்தகைய சூழ்நிலையில் வன்முறை தொடங்கியது? அதை மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தன? என்பது பற்றி மோடி விளக்குவார் என்று தெரிகிறது. மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் முழுமையாக பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×