search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய செல்போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய பேரன்
    X

    புதிய செல்போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய பேரன்

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர்.
    • நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கோனே கண்டலா அடுத்த பெத்தமரி வீடுவை சேர்ந்தவர் நாகம்மா (வயது 80). இவரது மகன், பெத்த பஜார். இவருக்கு வெங்கடேஷ், தினா என 2 மகன்கள் உள்ளனர்.

    உள்ளூரில் சரி வர கூலி வேலை கிடைக்காததால் பெத்த பஜார் தனது மனைவி மகன்களுடன் குண்டூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு வெங்கடேஷ் நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு ஆளானார். மேலும் புதிய செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. புதிய செல்போன் வாங்க வேண்டுமென தனது பெற்றோரிடம் பணத்தை கேட்டார். அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி வெங்கடேஷ் பாட்டி நாகம்மா வீட்டிற்கு வந்தார். பாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருக்கும் நகைகளை விற்று புதிய செல்போன் வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நள்ளிரவில் நாகம்மா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டார். பின்னர் வீட்டில் குழி தோண்டி பாட்டியின் உடலை புதைத்தார்.

    மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல் பாட்டியின் வீட்டில் இருந்து எமிகானூர் வந்து அங்குள்ள நகைக்கடையில் பாட்டியின் நகைகளை ரூ.29 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். பின்னர் குண்டூருக்கு சென்று அங்குள்ள செல்போன் கடையில் ரூ.25 ஆயிரத்திற்கு புதிய செல்போன் வாங்கினார்.

    இந்த நிலையில் நாகம்மாவின் வீட்டிற்கு மற்றொரு பேரன் கோபால் என்பவர் வந்தார். வீட்டில் பாட்டி இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து கோனே கண்டலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. போலீசார் வெங்கடேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து விற்பனை செய்ததை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    Next Story
    ×