search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனநாயகத்தின் தாயாக உருவெடுத்துள்ளது இந்தியா - பிரதமர் மோடி
    X

    ஜனநாயகத்தின் தாயாக உருவெடுத்துள்ளது இந்தியா - பிரதமர் மோடி

    • 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் நடைபெற்றது.
    • கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார்.

    17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளது. மிகவும் கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தியுள்ளார். ஒருபோதும் அதன் பணியை தடை படவிட்டதில்லை."

    "கொரோனா காலக்கட்டத்தில் எம்.பி.க்கள் தங்கள் ஊதியத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொண்டனர். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. உலகத்தின் முன்பு, நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அடையாளம், திறன்களை பறைசாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது."

    "ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜி20 மாநாட்டை போல, ஜி20 நாடுகளின் சபாநாயகர்களின் மாநாடும் நடைபெற்றது. ஜி20 மாநாட்டின் வெற்றிக்கு அனைத்து மாநிலங்களும் பங்களிப்பை வழங்கின."

    "17-வது மக்களவையில் செயல்திறன் 97 சதவீதமாக உள்ளது. 18-வது மக்களவையில், அவையின் செயல்திறன் 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் என உறுதி ஏற்போம். 17-வது மக்களவையில் பல்வேறு முத்திரைகளை பதித்துள்ளோம். அனைத்து கட்சிகளின் மக்களவை குழு தலைவர்களுக்கும் நன்றி."

    "ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு நீண்ட காலமாக காத்திருக்கப்பட்டது. புதிய அவையில் தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் மூலம் இஸ்லாமிய பெண்கள் துயரங்களை அனுபவித்தனர். முத்தலாக் தடை சட்டமும் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. மகளிருக்கு மரியாதை அளிப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க முடிவும் 17-வது மக்களவையில் தான் எடுக்கப்பட்டது."

    "வரும் 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்குவோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களுக்கான பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து இளைஞர்கள் பெரும் கவலை கொண்டனர். அதற்கான சட்டத்தை கொண்டு வந்து கவலைகளை நாம் அகற்றியுள்ளோம்."

    "தேசிய ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான சட்டம் இந்த அவையில் தான் இயற்றப்பட்டது. தேசத்தின் இளைஞர் சக்தியின் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்தியா விரைவில் ஆராய்ச்சிக்கான மையமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×