search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம்
    X

    எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம்

    • பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
    • இதனால் இரு அவைகளில் இருந்தும் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பாராளுமன்ற மக்களவையில் இருவர் புகுந்து வண்ண புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது மிகப்பெரிய பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் 146 எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராசா, சீத்தாரம் யெச்சூரி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் "ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

    உலக ஜனநாயக வரலாற்றில் 146 எம்.பி.க்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது. ஜனநாயகம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் என சசி தரூர் தெரிவித்தார்.

    "உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் பிடிவாதமாக இருந்தது. அதனால் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு எதிர்வினையாக 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    இரண்டு இளைஞர்கள் பாராளுமன்ற மக்களவையில் நுழைந்து புகை குண்டுகளை வீசினர். அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குளறுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த வழியில் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை இல்லாதது என்பதுதான்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×