search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் யாருடைய பிறந்த நாளையும் கொண்டாட விரும்பவில்லை: டி.கே.சிவக்குமார்
    X

    நான் யாருடைய பிறந்த நாளையும் கொண்டாட விரும்பவில்லை: டி.கே.சிவக்குமார்

    • நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது.
    • நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ்.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நான் யாருடைய பிறந்த நாளையும் கொண்டாட விரும்பவில்லை. எனது ஆதரவாளர்கள் சிலர் டி.கே.சிவக்குமார் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். நான் எனது பிறந்த நாளை மிக எளிமையாக தான் கொண்டாடியுள்ளேன். சித்தராமையாவின் 75-வது பிறந்த நாளையொட்டி தாவணகெரேயில் சித்தராமோத்சவா விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதில் நான் கலந்து கொள்வேன். ஊடகங்கள் இந்த விஷயத்தில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக தேவை இல்லாமல் சர்ச்சையை கிளப்புகின்றன. இந்த விஷயத்தில் பா.ஜனதா தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கின்றன.

    நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற போதே தனிப்பட்ட முறையில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம், கட்சியை புகழ்ந்து பேசுங்கள் என்று கூறினேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ். அதனால் நாங்கள் சுதந்திர தின பவள விழாவை கொண்டாடுகிறோம்.

    எடியூரப்பாவை எங்கள் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவது வழக்கம். இதற்கு வேறு அர்த்தமும் கற்பிக்க தேவை இல்லை. இன்னும் 15 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி தான் இருக்கும் என்று மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார். 15 ஆண்டுகள் எதற்கு, நீண்ட காலம் அவர்களே ஆட்சியில் இருக்கட்டும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    Next Story
    ×