search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் கவலைக்குரியவை: மத்திய அரசு

    இந்தியாவில் கடந்த டிசம்பர் 30-ந்தேதி கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் என்பது 1.1 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி தினசரி பாதிப்பு விகிதம் 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    புதுடெல்லி :

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் நுழைந்தபிறகு, கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகம் எடுத்து வருகிறது. இதனால் தினசரி, வாராந்திர பாதிப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது.

    இந்த தருணத்தில் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கடந்த டிசம்பர் 30-ந்தேதி கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் என்பது 1.1 சதவீதமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி தினசரி பாதிப்பு விகிதம் 11.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    அதே நேரத்தில், உலகளவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை என்றால் அது கடந்த 10-ந்தேதி பதிவானது. அந்த நாளில், உலகமெங்கும் 31 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

    தற்போது நமது நாட்டில் 300 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.

    மேலும், 19 மாநிலங்களில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மராட்டியம், மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரபிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கவலைக்குரிய மாநிலங்களாக உருவாகி வருகின்றன.

    ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவதற்கு எதிரான தடுப்பூசி செயல்திறன், அறிகுறியுடன் கூடிய கொரோனாவுக்கு எதிரானதை விட அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது மிக முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் நிருபர்களிடம் பேசுகையில், “ஒமைக்ரான் வைரஸ் சாதாரண ஜலதோஷம் அல்ல. அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போட வேண்டும். கொரோனா கால கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான பதிலளிப்பில் தடுப்பூசி முக்கிய தூண் ஆகும்” என கூறினார்.
    Next Story
    ×