search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது: சித்தராமையா

    பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் பலர் தாமாக முன்வந்து காங்கிரசில் சேருகிறார்கள். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் குடும்ப அரசியலால் அக்கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. மோடி பிரதமராக வந்த பிறகு அந்த திட்டங்களை நிறுத்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்தவர் மோடி. சுதந்திரத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர். ஆனால் மோடி காங்கிரசாருக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கிறார்.

    அம்பானியை விட அதானி பெரும் பணக்காரராக ஆகியுள்ளார். இதற்கு மோடி தான் காரணம். பட்டப்படிப்பு கூட படிக்காத அதானி ஆசியாவிலேயே பணக்காரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக பா.ஜனதாவினர் ஒருவராவது உயிர்த்தியாகம் செய்தனரா?. பா.ஜனதாவினர் பொய் பேசுகிறார்கள். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய மந்திரி ஒருவரின் மகன் கார் ஏற்றி கொன்றார். அத்தகையவர்கள் கொடூரமானவர்களாக இருக்க வேண்டும். பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் பலர் தாமாக முன்வந்து காங்கிரசில் சேருகிறார்கள். ஜனதா தளம் (எஸ்) கட்சியின் குடும்ப அரசியலால் அக்கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

    பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேருவது, காங்கிரசுக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்பதை காட்டுகிறது. மதத்தின் அடிப்படையில் செயல்படுவது பா.ஜனதா. அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்வது காங்கிரஸ். இந்துத்துவா பெயரில் மதங்களை உடைக்கும் வேலையை பா.ஜனதா செய்கிறது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×