search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக
    X
    பாஜக

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- பா.ஜ.க. நடத்தும் 6 பிரமாண்ட யாத்திரை

    உத்தரபிரதேச தேர்தலையொட்டி வாரம் ஒருமுறை பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா பரிவர்த்தன யாத்திரை 4 கட்டமாக நடத்தப்பட்டது. இது அக்கட்சிக்கு கைமேல் பலனை கொடுத்தது. இதே போல் இந்த தேர்தலிலும் 6 பிரமாண்ட யாத்திரை நடத்த பா.ஜனதா முடிவு செய்து உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் லக்னோவில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா, பா.ஜ.க. மாநில தலைவர் சுவத்தானந்தா தேவ்சிங் மற்றும் பொதுச்செயலாளர் சுனில் பன்சால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிக இடங்களை கைப்பற்றுவது எப்படி என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு 6 பிரமாண்ட யாத்திரைகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி


    15-ந் தேதி காசியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த யாத்திரையை தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரஜ், அவதா, கோரக்பூர் மற்றும் மேற்கு, கான்பூர் மண்டலங்களில் இந்த யாத்திரை நடைபெற உள்ளன.

    இந்த யாத்திரையில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    உத்தரபிரதேச தேர்தலையொட்டி வாரம் ஒருமுறை பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.

    7-ந் தேதி அவர் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக 13-ந்தேதி வாரணாசி செல்லும் மோடி அங்கு 2 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்க உள்ளார்.

    21-ந் தேதி பல்ராம்பூர் மற்றும் பல இடங்களில் புதிய திட்டங்களை அவர் அறிமுகம் செய்கிறார். 28-ந் தேதி கான்பூரில் மெட்ரோ திட்டத்தையும், பின்னர் மீரட்டில் மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் பிரயாத் ராஜ் பகுதியை இணைக்கும் வகையில் கங்கா எக்ஸ்பிரஸ் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடி சுற்றுப்பயணம் குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. ஆனாலும் பிரதமர் மோடி உ.பி.யில் நடக்கும் யாத்திரை மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    13-ந் தேதி மீண்டும் பா.ஜனதா தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் யாத்திரை நிகழ்ச்சி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.



    Next Story
    ×