search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    கொரோனா பாதிப்பால் நெருக்கடி- மத்திய அமைச்சகங்கள் 20 சதவீத செலவுகளை குறைக்க உத்தரவு

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் சரிவை கண்டுள்ளதால், கடும் நெருக்கடி உண்டாகி இருக்கிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நடப்பு 2021- 2022-ம் நிதியாண்டில் மத்திய அமைச்சகங்கள் 20 சதவீதம் வரை செலவுகளை குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத்துறை, அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திட்டங்கள் சாராத செலவினங்களை 20 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உள் நாட்டு, வெளிநாட்டு பயணங்கள், கூடுதல் நேரப் பணிக்கான சம்பளம், வாடகை உள்ளிட்ட செலவினங்களை குறைக்கலாம். அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அச்சிடுதல், பொருட்கள் வினியோகம், விளம்பரப்படுத்துதல், பராமரிப்பு ஆகியவற்றில் செலவினங்களை குறைக்க வலியுறுத்தப்படுகிறது.

    அதேவேளையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தடுப்பூசி (கோப்புப்படம்)

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே போல் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரே‌ஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ரூ.1.45 லட்சம் கோடிவரை செலவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையடுத்து செலவினங்களை குறைக்குமாறு அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    செலவுகளை குறைக்க தொடர்ந்து 2-வது ஆண்டாக மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய போதும், செலவுகளை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×