search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: கர்நாடகத்தில் எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி?

    கர்நாடகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த சேவைகளுக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த புதிய வழிகாட்டுதலை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    அந்த ஊரடங்கு மேலும் 14 நாட்கள் அதாவது கடந்த 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்தபோதிலும், ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் அதாவது வருகிற 21-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் அறிவித்தார். அதே நேரத்தில் மைசூரு உள்பட
    கொரோனா
    பாதிப்பு குறையாத 11 மாவட்டங்களில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அப்படியே ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். அந்த ஊரடங்கு தளர்வுகள் குறித்த புதிய வழிகாட்டுதலை மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    * வருகிற 14-ந் தேதி முதல் கர்நாடகத்தில் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி (கார்மெண்ட்ஸ்) உற்பத்தி நிறுவனங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.

    * உணவு உற்பத்தி, ஓட்டகள், மளிகை கடைகள், பழம்-காய்கறி கடைகள், இறைச்சி, மீன் கடைகள், பால் விற்பனை கூடங்கள், கால்நடை தீவனங்களை விற்பனை செய்யும் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கலாம். ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அங்கு அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சாலையோர வியாபாரிகள், ரேஷன் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

    * தனியாக இருக்கும் மதுக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மது வாங்கி செல்ல மட்டுமே அனுமதி உண்டு. அங்கே அமர்ந்து மதுகுடிக்க அனுமதி கிடையாது.

    * மின் வணிகம் மூலம் நிறுவனங்கள் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை வினியோகம் செய்ய தடை இல்லை.

    * அனைத்து வகையான கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்கலாம்.

    * பூங்காக்கள் திறக்கப்படலாம். அங்கு காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

    * ஆட்டோ-வாடகை கார்கள் 2 பயணிகளுடன் இயங்கலாம். டிரைவர் உள்பட காரில் பயணிப்பவர்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

    * அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

    * சுகாதாரத்துறை தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் இயங்கலாம்.

    * மூக்கு கண்ணாடி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கப்படலாம்.

    * இந்த ஒரு வார ஊரடங்கு தளர்வு காலத்தில் இரவு நேர முழு ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

    * இரவு நேர ஊரடங்கின்போது, இரவு நேரங்களில் செயல்படும் நிறுவனங்களுக்கு தடை இல்லை. அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டையை காட்டிவிட்டு பயணிக்கலாம்.

    * நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களின் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    * ரெயில், விமான போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. அங்கு செல்லும் பயணிகளின் வாகனங்களுக்கு தடை கிடையாது. ரெயில், விமான நிலையங்களுக்கு பஸ்களை இயக்கலாம். ஆனால் அதற்கான டிக்கெட் இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

    * அனைத்து வகையான சரக்கு வாகனங்கள், காலி சரக்கு வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை இல்லை.

    வார இறுதி முழு ஊரடங்கு கட்டுப்பாடு நாட்களில் தளர்வுகள் விவரம்:-

    * அவசர சேவைகள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    * அவசர-அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும், அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் இயங்க தடை இல்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. அவசியமான ஊழியர்கள் மட்டும் நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும். மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்ற வேண்டும்.

    * நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதற்கான குறைந்தபட்ச ஆவணங்களை காட்ட வேண்டும்.

    * ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணங்களை வீட்டிலேயே நடத்த வேண்டும். அதில் அதிகபட்சமாக 40 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

    * இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அனுமதிக்கப்பட்ட சேவைகளின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித விலகலை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

    அரசு-தனியார் பஸ்கள், மெட்ரோ ரெயில் போக்குவரத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×